விவசாயி விடும் டிஜிட்டல் கண்ணீர்


ஐயா வணக்கமுங்க…
அம்மாக்கும் வணக்கமுங்க..
மிஸ்டர் டிஜிட்டலுக்கும் வணக்கமுங்க.

நான் விவசாயி பேசுறனுங்க. விவசாயி ங்கற பேற கேட்டவுடனே பேக்கிரவுண்டுல ஒரு வயக்காடு, மண்டைல ஒரு உருமால, செம்மண் சேறு பட்டு உஜாலா நீலம் பாக்காத கந்தலான ஒரு கோவணம், கையில ஒரு மண்வெட்டி.
சட்டையில்லாத சதையுமில்லாத வெய்யில்ல காஞ்சு வேர்வையோடு ஊறிப்போன ஒரு உருவம்,
இந்த மாதிரியான ஒரு பிம்பம்தான் உங்க மனசுல தோனுச்சுன்னா சத்தியமா உட்டுறாதீங்க…
அந்த விவசாயி நானேதான்.

காசு பணத்துக்கு அப்பாற்பட்டு போற இடத்துல புண்ணியம் கிடைக்க, பல உசுறு பசியாற,
64 ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரமசிவன் போல, உசுரு படைக்குற கடவுளுக்கு நிகரா உலகத்துக்கு உணவு படைக்குற உத்தமமான தொழில் எங்களுது,
என் பாட்டன் பூட்டன் பண்ணுண தொழில்,
ஊர் ஒலகம் மதிச்ச தொழில் உருமாறி காலப்போக்கில் கேட்பாரில்லாம கிடக்குது. வரலாறு படைச்ச அரண்மனை மாதிரி இருந்த தொழிலு இப்ப சிதிலமடைஞ்ச குட்டிச்சுவரா நிக்குது.
படிப்பறிவு இல்லாத எங்களுக்கு சூதுவாது தெரியாது. நஷ்டம் ஏதும் வந்துச்சுன்னா இந்த விவசாயத்தை விட்டுபுட்டு வேற தொழிலுக்கு போக நாங்க தொழிலதிபர் இல்லீங்களே. கடன ஒடன வாங்கி கால் வயித்து கஞ்சி குடுச்சிட்டு வர்றோம்,
வெள்ளாமை பண்ணி புள்ள குட்டிகளை படிக்கவெக்கிறோம், ஆடுமாடு வளர்த்தி அமைதியா பொழப்ப ஓட்டிவந்தா இப்படி இடிமேல இடியா எங்கமேலயே எறக்குறீங்களே..

வாயு (மீத்தேன்) எடுக்க விவசாய நிலம், வாயு (கெயில் கேஸ்) கொண்டுபோக விவசாய நிலம்னு எங்க வயித்துலயும் வாயிலயும் ஏண்யா அடிக்குறீங்க??

ஏழு மாவட்டத்த தாண்டி ஏகப்பட்ட ஏக்கர் விவசாயபூமிய அழிச்சு கொண்டுபோற எரிவாயுவ எல்&டி சாலை வழியா கொண்டுபோக முடியாதா????

உங்களுக்கு விவசாயி என்னய்யா குத்தம் பண்ணான். இந்த நாட்டுல விவசாய குடும்பத்துல பொறந்து தப்பா?.
விளம்பர பிரியர்கள் மட்டுமே உள்ள மத்திய மற்றும் மாநில அரசே.. எந்த திட்டம் போட்டாலும் பார்த்து போடுங்கய்யா. காசு வாங்கி கையெழுத்து போடுறதுன்னாலும் யோசிச்சு போடுங்கய்யா. உங்க புள்ளகுட்டிங்க நல்லாருக்கும். மனக்குமுறல் இருந்தாலும் சாபம் விடக்கூட மனசு வராதுய்யா.. நல்லாயிருங்க.

ஓட்டுகேட்டு வரும்போது “இந்தியாவின் முதுகெலும்பே” ன்னு வசனம் பேசுனது ஞாபகம் இருக்குங்களா?? அதத்தான் இப்ப உடைக்குறீங்க மிஸ்டர் டிஜிட்டல் இந்தியா அவர்களே.. 
ரோட்டுவழியா கொண்டுபோற குழாய விளையுறகாட்டு வழியா கொண்டுபோனா இனி எங்கள் எருதுகளும் டிராக்டர்களும் கலப்பைகளை தார்போட்ட ரோட்டின்மேல் உழவு செய்யும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.