0 எளிய மக்களின் நாயகன் அரவிந்த் கெஜ்ரிவால் - ஒரு வாழும் சகாப்தம்

    வெற்றி பெற தேவை விடாமுயற்சி மட்டும் அல்ல, தன்னலமில்லாத ஒழுக்கமும் வேண்டும் என்னும் அறவழியில், எளிய மக்களில் ஒருவான நின்று, எளிய மக்களுக்காக போராடி வென்ற, வாழும் சகாப்தம், எளிய மக்களின் நாயகன்"அரவிந்த் கெஜ்ரிவால்".
    "இவர்கள் அடிமைகள். நாட்டை ஆளும் அளவிற்கு இவர்களுக்கு தகுதி இல்லை," என்று 200 வருடங்களுக்கும் மேலாக நம்மை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயன், தான் சுதந்திரத்தை மறுப்பதற்கு சொன்ன காரணம் இது. அவன் மூக்கை உடைத்துவிட்டு  ஜனவரி  26, 1950 ஆண்டில்        "ஜனநாயக இந்தியாவின்" ஏன்?!, உலக மக்களுக்கே தேவையான, தனித்துவமான ஜனநாயக சட்ட அமைப்புகளை உருவாக்கி, வெள்ளையனின் ஆணவத்திற்கு தீமூட்டி சிதை வைத்த வல்லமையாளர்களை கொண்டிருந்தது சுதந்திர இந்தியா.

ஆனால், கடந்த 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நாம் பெற்ற வளர்ச்சி என்ன?

        உலக அரங்கில் இந்தியர்களின் மூளைக்கென தனி மரியாதை இருந்தும், "கார்ப்பரேட் அரசுகளின்" கூட்டு திருட்டு கொள்கைகளுக்கு ஏற்ப இந்திய மக்களை அடிமையின் பிடியிலிருந்து மீட்டெடுக்க எந்த ஒரு நாயகனும் முன்வரவில்லை.

    காசு கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கும். பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லாவற்றிற்கும் ஊழல் செய்தே பழக்கப்படுத்திவிட்டார்கள்.  "சாமானிய மக்களின் கனவானது என்றுமே  உயிர் பெற்று எழுந்து விடக்கூடாது. என்னும் கூட்டு கொள்கையில் மட்டும் கவனமாக இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுரண்டி, கார்பரேட் அரசுகள் களமாடிக்கொண்டிருந்த அதே சமயத்தில், ஒரு எளிய மக்களின் நாயகன் உருவாகி கொண்டிருந்தான்." ஊழல் குற்றவாளிகளால் நாடு, சுடுகாடு ஆகிக்கொண்டிருந்த அதே சமயத்தில், அதே அரசு சக்கரத்தில் இருந்த அந்த நாயகனின் எழுச்சி  குரல் கம்பீரமாக தலைநகரில் ஒலிக்க ஆரம்பித்தது.

ஆம், ஊழலுக்கு எதிரான போரில்,  தலைநகரை அதிரவைத்த அர்விந்த் கெஜ்ரிவாலின் அந்த கோஷம் "அதிகாரத்தை கைப்பற்றாமல், வெறும் போராட்டங்களால் எளிய மக்களின் கனவுகளை நிஜமாக்க முடியாது".

    ஒரு விவசாயி தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்தாலும், சாதரணமாக ஒரு வார்டு கவுன்சிலர் தனது ஐந்தாண்டில் கொள்ளையடிக்கும் பணத்தில் பாதியை கூட சம்பாதித்து விட முடியாது. உலகுக்கே படி அளக்கும் விவசாயிக்கு மிஞ்சி இருப்பதோ கோவணம் மட்டுமே!.

லஞ்சம், ஊழல் நாட்டை பிடித்திருக்கும் கொடிய நோய்.

       இந்திய திருநாட்டில் கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் சமமாக வேண்டும். உயர்தரமான கல்வியும், மருத்துவமும் சாதரண எளிய மக்களுக்கு எட்டாகனியாகவே மாறிப்போய் விட்டது. 

          தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளை, உயிர் போகும் என்னும் நிலையிலும்  துளியும் இரக்கம் காட்டாமல் இலட்சக்கணக்கில் பணத்தை பிடிங்கி விட்டு உள்ளே அனுமதியுங்கள் என்று சொல்லும் தனியார் மருத்துவமனைகள் வரை, அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் "கார்ப்பரேட் வணிகர்களின் கையசைவிற்கு சலாம் போடும் முகமூடி அரசுகளை தோலுறிக்க வந்த நாயகனாகவே அரவிந்த் கெஜ்ரிவாலை" டெல்லி மக்கள் பார்க்கின்றனர். 

அண்ணா ஹசரேவுடனான தனது  போராட்ட பயணம் இறுதியில் புதிய பாதையை தேர்ந்தெடுத்தது. ஆம், அந்த பாதை மட்டுமே எளிய ஏழை மக்களுக்கான விடியலை பெற்றுத் தரும் என்ற  அதீத நம்பிக்கையின் காரணமாக ஒரு புதிய சக்தியை கையில் எடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அசிங்கங்களை களைந்தெடுக்கவும்,  ஏழைகளின் கண்ணீர் துடைக்கவும், தனது கையில் இருந்த துடைப்பத்தை உயர்த்தி பிடித்து டில்லி அதிர ஓங்கி ஒலித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம், இனி உங்கள் கனவை நிஜமாக போகின்றது.... "ஆம் ஆத்மி கட்சியால்"
ஓவ்வொரு இந்திய இளைஞனின் கைகளும்  60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முறுக்கேறியது. புஜங்கள் இருகியது. நெஞ்சத்தை நிமிர்த்தி, தலையை உயர்த்தி இந்திய நாடே குழுங்கும்படி முழங்கினார்கள்.

"ஆம் ஆத்மி கட்சி!!" "ஆம் ஆத்மி கட்சி!!" "ஆம் ஆத்மி கட்சி!!"

- அருணேஸ்