0 தகவல் அறியும் உரிமை சட்டம் - பயிற்சிபட்டறை

    நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். நாம் ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

   தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்:  அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

     ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

   இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

   தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

      இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

    தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

       ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை

எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)

 1. விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம். www .vikaspedia .in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 2. விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்
 3. பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.
 4. மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொதுதகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.
 5. பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.
 6. பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.
 7. விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
 8. பிரிவு SC, ST & OBC
 9. விண்ணப்பக் கட்டணம்.
 10. வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை
 11. கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.
 12. தேதி மற்றும் இடம்.
 13. மனுதாரரின் இடம்.
 14. மனுதாரரின் கையொப்பம்
 15. இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..
 16. மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
 17. தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
 18. கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.
 19. மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.
 20. விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.
 21. நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.
 22. கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.

பின் வருவனவற்றையும் கவனத்தில் கொள்க

 • சாதாரணமாக தகவலைத் தெரிவிக்க 30 நாள்
 • கேட்கப்படும் தகவல் ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைக்  குறித்ததாக இருப்பின் 48 மணி நேரம்
 • துணை பொதுதகவல் அதிகாரி(APIO) மனுவைப் பெற்றிருந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு சூழல்களுக்கான கால அவகாசத்துடன் மேலும் 5 நாள் சேர்த்துக்கொள்ளப்படும் (30 நாள்+5 நாள்)/48 மணி நேரம் + 5 நாள்)


தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

மாதிரிக் கேள்விகள்
மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)
1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.
2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?
3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?
4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?
5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

 • விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.
 • விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.
 • அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.
7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறும் நடைமுறை

உங்களது ஆர்டிஐ விண்ணப்பத்தை வெற்றிகரமாக எழுதி/தயாரித்து விட்டீர்கள். உங்களது விண்ணப்பத்தை அதற்கான கட்டணத்துடன் பின்வரும் இரண்டு வழிகளில் எதன் மூலமாகவாவது அனுப்பலாம்.
1) தபால் மூலமாக: அனுப்பவேண்டிய அரச அலுவலகத்தின் தலைமைக் கணக்கு அதிகாரியின் பேருக்க ரூ. 10/- வரையோலை அல்லது வங்கியாளர் காசோலை அல்லது ரூ. 10/- க்கு கோர்ட் ஸ்டாம்ப் எடுத்து உங்களது மனுவுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பலாம்.
2) நேரடியாக: நீங்களே நேரடியாகவோ அல்லது மற்றொருவர் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கே உங்களது மனுவை அளித்து, அதற்கான கட்டணத்தைப் பணமாக அதே அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தலாம்

தலைமைத் தகவல் ஆணையர்
திரு. எஸ் ராமக்கிருஷ்ணன்        
எண் 89, டாக்டர் அழகப்பாசாலை,
புரசைவாக்கம்,
சென்னை - 600 084.
இணையதள முகவரி : http://www.tn.gov.in/rti/sic.htm

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும், பதில்களும்
கேள்வி : எங்கே, எவ்வாறு முறையிடுவது ?
பதில் :

 • மத்திய அரசு அதிகாரிகள் சம்மந்தமான தகவல் பெற கீழ்கண்ட முகவரியில் உள்ளோரை தொடர்பு கொள்ளலாம்
மத்திய தகவல் ஆணையம்,ஆகஸ்டு கிராந்தி பவன்,பிகாஜி காமா வளாகம்,புதுடெல்லி 110066, வலைதளம் : www.cic.gov.in
 • மாநில அரசு அதிகாரிகள் சம்பந்தமான தகவல் பெற, அந்தந்த மாநில தகவல் ஆணையத்தை அணுகி, விண்ணப்பங்களை கொடுக்கலாம்
 • மாநில தலைநகரத்தில் இருக்கும் தலைமை அதிகாரிகள் (தலைமைச் செயலாளர், துறையின் செயலாளர்) தலையீடுமாரு, அவர்களிடமும் விண்ணப்பிகலாம். இவ்வாரு செய்வதன் மூலம், தகவல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
 • முறையீடு அனுப்பியவுடன், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா, பதிவு எண், நாள், அதன்மீது அப்போதைய நடவடிக்கை நிலவரம் போன்றவற்றை இது தொடர்பான வலைதளத்தில் பார்க்கவும்.
 • பொது தகவல் அலுவலர், மேல் முறையீட்டு முதன்மை அலுவலர்களுக்கும் கூடவே மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்கும் மனுவின் பிரிதியை அனுப்பலாம்.
 • மனுதாரருக்கு,  இரண்டாம் மற்றும் இறுதியான முறையீட்டு கோரிக்கையாடு சேர்த்து மனுவையும் கொடுக்கும் வசதி உண்டு.

கேள்வி : முறையீடுகளுக்கு ஏதேனும் வரையறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளனவா ? முறையீட்டில் என்ன மாதிரியான கோரிக்கைகள், குறைகள் தெரிவிக்கப்படலாம்?
பதில்:

 • மத்திய தகவல் ஆணையம் மற்றும் சில மாநில தகவல் ஆணையங்கள் குறிப்பிட்ட சில தகவல்களை மனுவுடன் அளிக்க வேண்டும் என வரையறுத்துள்ளது.
 • சில மாநில தகவல் ஆணையங்களிடம் வரையறுக்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் உள்ளன
 • தகவல்கள் குறிப்பிட்ட காலவறையறைக்குள் கிடைக்கப் பெறாவிட்டால், பொதுமக்கள், தகவல் அலுவலர், முதன்மை மேல் முறையீட்டு அலுவலர், ஆகியோருக்கு, தண்டனை அல்லது குறித்த நேரத்தில் தகவல் பெற முடியாமைக்கு ஈட்டுத் தொகை ஆகியன வேண்டியும் விண்ணப்பம் செய்யலாம்.
 • வாழ்க்கை மற்றும் விடுதலை சம்பமந்தமான முறையீடுகளை “தெளிவாக” வாழ்க்கை மற்றும் விடுதலை-அவசரம் என அடிக்கோடிட்டு முறையீட்டை விண்ணப்பிக்கலாம். இது முன்னுரிமை அடிப்படையில் (கால தாமதம் இன்றி) உடனடியாக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மாநில தகவல் ஆணையத்துடன் மின் அஞ்சல் வழி, அடிக்கடி தொடர்பு மிகவும் பயனுள்ளது.

கேள்வி : முறையீடு செய்வதற்கு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப் படுகிறதா?
பதில்:

 • மத்திய தகவல் ஆணையம் முறையீடு செய்வதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால் சில மாநில தகவல் ஆணையங்கள் இதற்கு கட்டணம் வசூலிப்பதுண்டு

கேள்வி : முறையீட்டு விண்ணப்பத்திற்காண பதில்களை எவ்வாறு பெறலாம் ?
பதில் :

 • சில நேரங்களில் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி அல்லது முதன்மை மேல் முறையீட்டு அலுவலர் மாநில தகவல் ஆணையம் மற்றும் மத்திய தகவல் ஆணையம் விசாரிக்கும் முன்னரே கோரிக்கைகளை தீர்வு செய்வார்.
 • தகவல் ஆணையங்கள் பொது நிதிமன்றங்களுக்கு உண்டான அதிகாரங்களை பெற்றுள்ளனர். உதாரணமாக தாக்கீது அனுப்புதல், நேரடியாக விசாரணைக்கு உட்படுத்துதல், வாய்மொழி மற்றும் பதிவு பூர்வ ஆதாரங்களை சமர்ப்பித்தல் போன்றவை.
 • பொது தகவல் அலுவலர்/முதன்மை மேல் முறையீட்டு அலுவலர் ஏராளமான முறையீடு மற்றும் மேல் முறையீடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. எனவே முறையீடு வந்தவுடன் அதிகபட்சம் ஒரு வருடத்தில் இருந்து 3 வருடம் வரை தீர்வு காண நேரிடலாம்.

கேள்வி : விண்ணப்பம் எழுதுவது எப்படி ?
பதில் :

 • தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விண்ணப்பம் செய்யும்போது, கேள்விகள் தொகுக்கப்படுவது மிகவும் முக்கியமானது. சிறு பிழை/தவறான அர்த்தம் கொள்ளக் கூடிய கேள்வி அல்லது தெளிவற்ற கேள்விகள், தகவல் உரிமை அலுவலருக்கு, தங்களது விண்ணப்பதை தள்ளுபடி செய்ய ஏதுவான காரணங்களாக அமையலாம்.
 • விண்ணப்பம் எழுத சில வழிகாட்டுதல்கள்
 • விண்ணப்பிப்பதற்கு ஒரு வெள்ளைத்தாள் போதும். எழுதும் நோட்டு பேப்பரிலேயே, விண்ணப்பிக்கலாம். நீதிமன்ற முத்திரைத்தாள் தேவையில்லை.
 • விண்ணப்பம் தட்டச்சில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கையால் எழுதிக் கொடுக்கலாம்.
 • விண்ணப்பம் தெளிவான எழுத்துக்களில், படித்து புரிந்து கொள்ளக்கூடிய அளவில் இருக்க வேண்டும்.
 • தகவல் வேண்டுவன எத்தனை பக்கங்களாகவும் இருக்கலாம்.
 • ஒரு விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கப்படலாம்.  இருப்பினும் குறிப்பிட்ட அளவிலும், மற்றும் தொடர்புடைய கேள்விகளாகவும் இருத்தல் நல்லது.
 • வேண்டிய தகவலை சிறு கேள்விகள் மூலம் கேட்கலாம். நெடிய தகவல்கள் வேண்டி ஒரே விண்ணப்பத்தில் கேட்பதை தவிர்க்கவும். விண்ணப்பத்தில் உங்கள் பெயர், கையொப்பம் போதுமானது. பதவி மற்றும் இதர பொறுப்புகள் தேவையில்லை.  ஏனெனில் தகவல் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை.
 • நேரடியாக ஏன் என்று ஆரம்பமாகும் விண்ணப்பங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்பட ஏதுவாகும். உதாரணமாக, ஏன் அந்தப் பில்  அனுமதிக்கப்படவில்லை? என்று எழுதுவது.
 • தாங்கள் பாதிக்கபட்டவராக இருப்பின், பகுதி 4(1)(d)-ன்படி நிர்வாக மற்றும் அரசு நீதித்துறையின் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களை கேட்கலாம்.
 • கேள்விகள் அதிக பக்கங்கள் இருப்பின் ஒலித்தட்டு(CD) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
 • தங்களுக்கு எதற்காக தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதை தெரிவிக்க அவசியமில்லை.
 • கட்டணம் செலுத்திய காசோலை, கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை, விண்ணப்பத்தின் இறுதியில் தவறாமல் குறிப்பிடவும்.

கேள்வி: விண்ணப்பம் யாருக்கு அனுப்பப்பட வேண்டும் ?
பதில்:

 • எந்த பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவர் முகவரிக்கு விண்ணப்பம் எழுதலாம்.
 • ஒரு வேளை அருகில் உள்ள பொது தகவல் அலுவலரின் தகவல்கள் அறிய முடியவில்லை எனில், பொது தகவல் அலுவலர், C/o தலைமை அலுவலர் என்று எழுதி,  மாவட்ட உயர் அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.
 • அந்த துறை தலைமை அலுவலர் அதனை அதற்குண்டான தகவல் அலுவலருக்கு அனுப்புவார்.
 • தகவல் உரிமை அலுவலரின் பெயரிடாமல் விண்ணப்பம் சமர்ப்பித்தல் நலம், ஏனெனில் அலுவலர்கள் பணி இடமாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.

கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்  முறையீடு செய்யும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டதா?
பதில்:

 • மாநில, மத்திய, நீதிமன்றங்கள் போன்றவை தனிதனியே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்க விதிமுறைகளை வகுத்துள்ளனர்
 • கட்டணம் மற்றும் அதை செலுத்தும் முறை மாநிலத்திற்கு மாநிலம் வித்யாசப்பட்டவை. எனவே உங்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகளை அறிந்து, அதை பின்பற்றுதல் அவசியம். உரிய கட்டணத்தை, டிமாண்ட் டிராப்ட், பாங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை (சில மாநிலங்களில்), கோர்ட் ஸ்டாம்புகள் (சில மாநிலங்களில்), வரையறுக்கப்பட்ட வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துதல் போன்றவை சில வழிமுறைகளாகும்.
 • மத்திய அரசின் கீழ் வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத்துறை, "Accounts officer"  என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கோட்புகாசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முதல் முறையீடு எவ்வாறு எழுதுவது ?
பதில்: 

 • தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ன்படி, முதல் மேல்  முறையீடுக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
 • முதல் மேல் முறையீட்டு மனு, மத்திய தகவல் அலுவலரிடம் இருந்து  முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் முதன்மை மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
 • முப்பது நாட்களுக்குள் அதற்குண்டான பதில் கிடைக்கப் பெறவில்லை எனில் (இணை தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்), மத்திய தகவல் அலுவலரிடமிருந்து பதில் கிடைக்க வேண்டிய தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்
 • முதல் மேல்  முறையீடு மனுவை அனுப்ப வேண்டிய அதிகாரி, அவருடைய முகவரி போன்றவற்றை மத்திய தகவல் அலுவலரிடமிருந்து வந்த பதில் கடித்தத்திலிருந்து  கண்டறியலாம். குறிப்பிட்ட துறையின் வலைதளத்திலிருந்தும் இந்த தகவலை பெறலாம்.
 • மேற்கண்ட எந்த முயற்சியிலும் தங்களுக்கு முதல் மேல்முறையீட்டு அலுவலரின் விபரம் தெரியவில்லை எனில்,
முதன்மை மேல் முறையீட்டு அலுவலர்
C/o.தலைமை அலுவலர்,
......துறை க்கு நேரடியாக விண்ணப்பிக்கவும்.
(மேலும் அந்தந்த துறை தலைமை தகவல் அலுவலருக்கும் அனுப்பலாம்).
 • நீங்கள் முதல் மேல்முறையீட்டு விசாரணையின் போது இருக்க விருப்பப்பட்டால், முறையீட்டு மனுவின் கீழ் அதனை தெளிவாக குறிப்பிடவும்.
 • முதல் மேல் முறையீட்டிற்கு மத்திய தகவல் துறையின் கீழ்வருபவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
 • சில மாநிலங்கள் முதல் மேல் முறையீட்டுகளுக்கு கட்டணங்கள் மற்றும் படிவங்களை வடிவமைத்து உள்ளன.
 • அனைத்து இணைக்கப்பட்ட சான்றிதழ்களும் சுயமாக உண்மை நகல் சான்று ஒப்பமிடப்படவேண்டும். Attested என்று எழுதி, அதன் கீழ் கையொப்பமிட்டு பெயர் எழுதப்படவேண்டும்.
 • விண்ணப்பத்தின் முழுமையான பிரதியினையும், அனுப்பியதற்கு உண்டான அஞ்சல் ரசீது மற்றும் ஒப்புகையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
 • நேரடி விண்ணப்பம் சரியானது, எனினும் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல்/ அஞ்சலக சான்று அஞ்சல் மூலமாக அனுப்புதல் நல்லது. தனியார் அஞ்சல் சேவை மூலம் அனுப்பக் கூடாது.
 • முதல் மேல் முறையீட்டு  அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை / முடிவினை விவரிப்பார். தாமதத்திற்கு தகுந்த  காரணங்களை எழுத்து மூலம் தெரிவித்து விட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக் கொள்ளலாம்.
 • முதல் மேல் முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்து பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

கேள்வி: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இரண்டாம் மேல் முறையீட்டு மனு செய்வது எப்படி ?
பதில்

 • மேல்முறையீட்டு மனுவை பூர்த்தி செய்து, இது வரை கிடைக்கப் பெற்ற பதில்களின் நகல்களை இணைத்து அனுப்பலாம்.
 • மேல்முறையீடு எனில் புகார்/ புகார்தாரர் ஆகியவற்றை நீக்கவும்.
 • முதல் மேல்முறையீட்டு மனுவின் நகல் மற்றும் இணைப்புகள் விண்ணப்பம் நிறப்புக் கட்டணமான ரூ. 10-ஐ வங்கி கேட்பு காசோலை/செலுத்துசீட்டு/அஞ்சல் ஆணை/ ரொக்கம் செலுத்திய ரசீது போன்றவை மூலம் செலுத்தலாம்.
 • தலைமை தகவல் உரிமை அலுவலரின் தாக்கீது கடிதத்தின் நகல் மற்றும் கட்டணங்கள் அனுப்பியமைக்கான அஞ்சலக சான்று (நகல்)
 • அஞ்சலக தபால் ஒப்புகை, மற்றும் தலைமை பொது தகவல் மைய அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகை மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகைகள்.
 • தலைமை பொது தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட முடிவுரை அறிவுறுத்தல்கள்
 • அனைத்து படிவங்களையும், தாள்களையும் குறியீடிட்டு வரிசைப்படுத்தி, ஒவ்வொரு தாளின் வலது பக்க மேல் மூலையில் வரிசையின்படி பக்க எண் குறிப்பிடவேண்டும். இது இரண்டும் மேல்முறையீட்டு மனுவின் முதல் பிரதி ஆகும்.
 • மேற்கண்ட அனைத்தையும் நான்கு தொகுப்புகள்/ புகைப் பிரதி எடுக்கப்படவேண்டும்.
 • ஒவ்வொரு பக்கத்தின் கீழ் கையொப்பமிடவேண்டும்.
 • முகவுரை பக்கம் மற்றும் தாக்கீது விபர பட்டியலிலும் கையொப்பமிட வேண்டும்.
 • புகை பிரதிகளின் கீழ், சுய உண்மை நகல் சான்று ஒப்பமிடல் வேண்டும் “உண்மை நகல்” என்று எழுதி அதன்கீழ் கையொப்பமிட்டு அதன் கீழ்முழுப்  பெயரை தெளிவாக எழுதுதல் வேண்டும்.
 • ஒரு தொகுப்பினை தலைமை தகவல் அலுவலருக்கு பதிவு அஞ்சல் (அ) விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும். முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கு ஒரு தொகுப்பும் அனுப்பவேண்டும். அனுப்பியதற்குண்டான ரசீதுகளையும் இணைக்க வேண்டும்.
 • முதன்மை விண்ணப்பத்தினை, பதிவு அஞ்சல் மூலமாக (கூரியர் கூடாது) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
The Registrar,
CENTRAL INFORMATION COMMISSION
II floor, August Kranti Bhavan,
Bhikaji Kama Place,
NEW DELHI 110066
 • ஒரு தொகுப்பினை தங்கள் பரிசீலனைக்கு பத்திரப்படுத்தவும்.
 • தலைமை தகவல் அலுவலரிடமிருந்து மனு கிடைத்ததற்கான ஆதாரம் 15 நாட்களுக்குள் பெறவில்லை எனில், மீண்டும் ஒரு நகலை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும்.
 • உங்கள் அருகாமையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் அல்லது தகவல் பெறும் உரிமை சம்பந்தமாக பணியாற்றும் நிறுவனங்களிடமிருந்து இது தொடர்பான ஆலோசனையும் பெறலாம்.
கேள்வி: தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் யார் யாரெல்லாம் தகவல் பெறலாம் ?
பதில்

 • எந்த ஒரு இந்தியக்குடிமகனும் தகவல் பெறலாம்
 • இந்தச்சட்டம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
 • அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.
 • இந்திய குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளில் உள்ள நமது நாட்டின் தூதரக அலுவலகங்களில் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

கேள்வி : தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பத்தினை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் ?
பதில் 
 • தகவல் பெறும் உரிமைச்சட்டத்திற்கான உங்களுடைய
 • விண்ணப்பம் உரிய தகவல் அலுவலரிடம் சென்றடைந்துள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதை அறிய, கீழ்கண்ட வழிமுறைகள் பெரிதள்வில் உதவும்.
 • நேரடியாக கையில் விண்ணப்பதினை கொடுத்தல் - உங்கள் விண்ணப்பதினை பெற்றுக் கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்தியமைக்கான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை அனைத்தும் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுதல்.
 • பதிவு அஞ்சலுடனான பதில் அட்டை (AD)
 • விரைவு அஞ்சல் (தபால் துறையின் ஒரு சேவை)- உங்கள் விண்ணப்பதினை விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்தல்.  http://www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணைய தளம் மூலம் உரிய அலுவலகத்திற்கு சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து அதற்கான நிலை குறித்து ஒரு அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
 • சாதாரண அஞ்சல் அல்லது தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. காரணம், விண்ணப்பம் சேர்ந்தமைக்கான உத்திரவாதம் எதுவும் கிடைக்காது.
RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம். 
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின் முழுமுகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி
5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்
6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)
7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும்
8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.(மேல் முறையீட்டின் போது ஒப்புதல் அட்டை முக்கியம்.

தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?
1) பதிவேடுகள் (Records), 
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை, (The right to review relevant documents and records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) ஆகியன 

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.

மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயசாலை, 
ஆலையம்மன் கோவில் அருகில் ,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580

தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை 

பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிவரும் 

1. நியாயமான காரணம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால் 
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால் 
4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும் வகையில் தகவலை தெரிந்தே கொடுத்தால் 
5. தகவலை அழித்தால் 
6. தகவல் கொடுப்பதை தடுத்தால், 
 • பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம், ரூ 25,000 உயர்த பட்ச அபராதம் 
 • பிரிவு 20 (2) படி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
 • தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான் தண்டனை விதிக்க முடியும் 
 • நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீது தண்டனை விதிக்க இயலாது.
குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது - தண்டனைகள் (பிரிவு-20) 

மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் 
தீர்மானிக்கும்போது: 

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ; 
2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ; 
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ; 
4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ; 
5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். 

எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும். 
பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும். 
மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலத்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
 • இதற்கான இணையதளங்கள்: http://www.righttoinformation.gov.in/ 
 • இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.
 • ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.
 • தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய தளம் http://www.tn.gov.in/rti/
 • தகவல் அறியும் உரிமை பற்றி மத்திய அரசின் இணையத்தளம் http://rti.gov.in/
 • மேலும் தகவல் உரிமை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்http://persmin.nic.in/RTI/WelcomeRTI.htm
 • முறையாக தகவல் கேட்பது எப்படி? http://www.rtiindia.org/
 • கிராம மற்றும் பஞ்சாயத்து நிர்வகாம் பற்றி அரசாங்கத்தின் கோப்புhttp://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf
Source :
http://ta.vikaspedia.in/, http://www.smartnews.kalvisolai.com/