0 தன்னாட்சி 19 - சுயமாகச் செயல்படும் கிராம சபை

மாநில அரசின் தலையீட்டினை தவிர்க்க பஞ்சாயத்துக்கள் சுயமாகச் செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும் – அர்விந்த் கெஜ்ரிவால்
பஞ்சாயத்துக்களில் மாற்றம் ஏற்படுத்துவது பற்றி இன்னும் சொல்லுகிறார் திரு அரவிந்த் கெஜ்ரிவால்

கோட்ட மற்றும் மாவட்டப் பஞ்சாயத்துகள்:

தற்போதைய நிலை:
கிராம பஞ்சாயத்துகள் தனித்து இயங்குவதில்லை. கோட்ட அல்லது மாவட்டப் பஞ்சாயத்துகளின் கீழ் வருகின்றன. இந்த அமைப்புகள் தான் கிராமப் பஞ்சாயத்தின் வேண்டுகோள்களை அங்கீகரித்து, நிதியும் கொடுக்கின்றன.
யோசனைகள்:
·         கிராமப் பஞ்சாயத்துகள் தனித்து இயங்குபவையாக இருக்க வேண்டும்.
·         நடக்கும் அனைத்து வேலைகளிலும் மக்களின் பங்களிப்பு நேரடியாக இருக்கவேண்டும்.
·         நிர்வாகம், மற்றும் நிதித்துறை இரண்டைப் பொறுத்தவரை கிராமப் பஞ்சாயத்துகள் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்க தேவை இருக்கக்கூடாது.
·         எந்த ஒரு புதிய திட்டமும் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி இல்லாமல் தொடங்கக்கூடாது. சம்மந்தப்பட்ட கிராம சபை ஒப்புக்கொண்டால் தான் புதிய திட்டம் செயலாக்கப்படலாம்.
·         கிராம சபைக்கும், கோட்டப் பஞ்சாயத்துக்கும் பாலமாக பஞ்சாயத்துத் தலைவர் செயல்பட வேண்டும். கிராம சபைகளின் அனுமதியின்றி கோட்டப் பஞ்சாயத்தில் அவர் எந்த வாக்குறுதியும் கொடுக்கக்கூடாது. அதேபோல கிராம சபையின் ஒப்புதலோடு மட்டுமே முடிவெடுக்க வேண்டும்.
சட்டங்கள் இயற்றுவதில் மக்களின் பங்கு
தற்போதைய நிலை:

நம் ஜனநாயகத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. மக்களின் நேரடிப்பங்கு இல்லாமல் இயற்றப்படும் சட்டங்கள் சில வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர சட்டம் இயற்றுவதில் மக்களின் பங்கு மிகவும் அவசியம்.

யோசனைகள்:
·         5% அல்லது அதற்கு அதிகமாக எண்ணிக்கை கொண்ட கிராம சபைகள்  ஒரு சட்டம் தேவை என்று மனு அளித்தால், மாநில அரசு அந்த தகவலை மற்ற கிராம சபைகளுக்கு தெரிவிக்க வேண்டும். 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கிராம சபைகள் அதற்கு ஒப்புதல் கொடுத்தால் அதை சட்டமாக இயற்ற வேண்டும். புதிய திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் கூட இந்த முறையைப் பின்பற்றலாம். நாட்டின் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதுப்பாதையை வகுக்கும். காவல்துறை, நீதித்துறை என்று எல்லா துறைகளிலும் மக்களின் நேரடிப் பங்களிப்பிற்கு இந்த முறையை பின்பற்றலாம்
·         எம்.எல்.ஏக்களும், எம்.பி.க்களும் கோட்ட, மாவட்டப் பஞ்சாயத்தின் பிரதிநிதிகள். ஆனால் இவர்களுக்கென்று பொறுப்புகள் ஏதும் தரப்படவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் முன்வைக்கப்படும் மசோதாக்கள், சட்டங்கள், திட்டங்கள் இவற்றின் பிரதிகளை இவர்கள் கோட்டப் பஞ்சாயத்தின் முன் வைக்கவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். கிராம சபைகளில் இவை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று, அவற்றின் முடிவுகளை மேற்கண்ட அவைகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
இன்னும் சில யோசனைகள்:
·         தங்களை நேரடியாக பாதிக்கக்கூடிய முடிவுகளில் தகவல் கேட்டறியும் உரிமை கிராம சபைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.


·         பஞ்சாயத்து செயலரை கிராம சபை நியமிக்க வேண்டும். இதனால் அவர் கிராம சபையின் நேரடி கண்காணிப்பில் வருவார்.
·         கிராம சபையின் ஒப்புதல் இன்றி எந்த அரசாங்க வேலைக்கும் பணம் வழங்கக்கூடாது. இதனால் பஞ்சாயத்தில் ஏற்படும் முறைகேடுகளைக் குறைக்கலாம்.
·         கிராம சபைகளின் அனுமதியின்றி மதுபானக்கடைகளுக்கு உரிமம் கொடுக்கக்கூடாது.
·         தொழிற்சாலை, சுரங்க வேலை எதற்குமே கிராம சபையின் ஒப்புதலுடனேயே உரிமம் வழங்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்துதல்:

தொழிற்சாலை அமைக்கவும் வேறு உபயோகங்களுக்காகவும் நிலங்கள் மக்களின் ஒப்புதல் இன்று பறிக்கப்படுகின்றன. இதனால் கிராம மக்கள் பலர் வீடிழந்தும், வேலையிழந்தும் திண்டாடுகிறார்கள். அரசு தரும் நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை. ஒரு விவசாயி தன்னிடம் இருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில் தன் மொத்தக் குடும்பத்திற்கும் ஆயுள் முழுவதும் உணவு கொடுக்க முடியும். ஆனால் அந்த நிலத்தை எடுத்துக் கொண்டு அரசு கொடுக்கும் 40,000 ரூபாயில் எத்தனை நாள் வாழ்க்கை நடத்தமுடியும்?
யோசனை:
·         மக்களின் நன்மைகளை மனதில் கொண்டு நிலத்தைத் தருவதா வேண்டாமா என்று கிராம சபை தீர்மானிக்கவேண்டும். கிராம சபைகள் நிபந்தனைகளையும் கிராம சபை விதிக்கலாம்.
·         தொழிற்சாலை தொடங்க விரும்பும் நிறுவனம், மத்திய மாநில அரசுகள் முதலில் பஞ்சாயத்திற்கு நிலம் வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும்.
·         திட்டம் சம்மந்தப்பட்ட எல்லா விவரங்களையும் கிராம மக்களின் மொழியில் மொழி பெயர்த்து மக்களின் ஆலோசனைக்கு வைக்க வேண்டும். இரண்டு மாத இடைவெளியில் கிராம சபைக் கூட்டம் கூடி சந்தேகங்கள், பயங்கள் முதலியவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து, நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.
·         நிலத்தை இழப்பவர்களின் மறுவாழ்வுக்கு சரியான தீர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்கள் விவசாயத்துக்கேன்றே விடப்பட வேண்டும்.
·         நில ஆவணங்கள் கிராம சபையின் மேற்பார்வையில் பஞ்சாயத்துக்களே வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாதமும் விற்பனையான நிலங்களின் ஆவணங்கள் கிராம சபையின் பார்வைக்கு வரவேண்டும்.
·         கிராமப் பகுதிகளில் இருக்கும் சிறிய நீர்நிலைகள், கனிம வளங்கள், வன உற்பத்திப்பொருட்கள் ஆகியவற்றிற்கு கிராம சபைகள் உரிமையாளர்கள் ஆக்கப்பட வேண்டும். நம் நாட்டின் கருவூலங்கள் இயற்கை வளங்கள். அவற்றை பயன்படுத்தும்போது மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்.
·         சாதி, வருமானம், வசிப்பிடம் போன்றவற்றிற்கான சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்துகளிடம் இருக்க வேண்டும்.
·         வரிவசூல் செய்வதன் அனுகூலங்கள் மக்களுக்கு நன்கு புரிந்திருப்பதால் வரி வசூலில் மக்களின் நேரடிப் பங்களிப்பு இருக்கவேண்டும். மக்களின் முன்னேற்றத்திற்காக வரி வசூல் செய்யப்படுவதால் கிராம சபைகளுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்படவேண்டும்.
·         ஒவ்வொரு கிராமமும் தனிப் பஞ்சாயத்தாக உருவாக வேண்டும்.
·         பஞ்சாயத்து ஆவணங்கள் எல்லா மக்களின் பார்வைக்கும் கிடைக்கும்படி வெளிப்படையாக இருக்கவேண்டும்.
·         பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் விதிமீறல்களை சரி செய்ய லோக்பால் அமைக்கப்படவேண்டும்.
·         மாநில அரசின் தலையீட்டினை தவிர்க்க பஞ்சாயத்துக்கள் சுயமாகச் செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும்.
பயனாளிக் குழுக்கள்:
கிராம சபை எடுக்கும் ஒரு முடிவு அந்தக் கிராமத்தின் ஒரு சாராரை பாதிக்கிறது என்றால் அதைத் தீர்த்துவைக்க இந்தப் பயனாளிக் குழுக்கள் பயன்படும்.

கிராம சபைகளை நல்ல முறையில் செயல்பட வைக்க மேற்கூறிய யோசனைகளைக் கூறிய திரு அரவிந்த் கெஜ்ரிவால் நகரங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லி அதைப்பற்றியும் பேசுகிறார்.

அடுத்த பகுதியில் பார்ப்போம்.