0 தன்னாட்சி – வளமான இந்தியாவை உருவாக்க

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் கிடைத்தால்தான் ஊழல் ஒழியும் திரு.அர்விந்த் கெஜ்ரிவால்ஆம் ஆத்மி கட்சியும், அதன் தலைவர் திரு அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களும் அடிக்கடி சொல்லும் தன்னாட்சி என்றா என்ன என்பதை எளிமையாக விளக்கவே இந்தக் கட்டுரைத் தொடர்.

நம் நாடு மிகப்பெரிய குடியரசு நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. குடியரசு என்றால் குடிமக்களின் ஆட்சி என்பது தானே பொருள்? அப்படி இருக்கும்போது தன்னாட்சி என்றால் என்ன? சுதந்திரம் கிடைத்ததிலிருந்து நம்மை ஆண்டு வருகிறார்களே, அது என்ன ஆட்சி? தன்னாட்சி வேறு, குடியரசு வேறா?

நம்நாடு சுதந்திர நாடு என்கிறார்கள், சரி. ஆங்கில அரசிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டோம். புரிகிறது. அதென்ன குடியரசு? சுதந்திர நாடு என்பதற்கும், குடியரசு என்பதற்கும் என்ன வித்தியாசம்? சுதந்திரம் வாங்கியபோதே நாம் குடியரசாக மாறவில்லையா?

இந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை பார்ப்பதற்கு முன் நம் இந்திய நாட்டின் வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம். ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன் நம் நாட்டில் முடியாட்சியே நடந்து வந்தது. அதாவது மன்னர்களின் ஆட்சி. நம் நாடு சிறுசிறு துண்டுகளாக இருந்து வந்தது. பல்வேறு ராஜ்ஜியங்கள்; பல்வேறு அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தன. இந்த அரசர்களுக்குள் ஒற்றுமை என்பதே இருக்கவில்லை. தமது சின்ன ராஜ்ஜியங்களை விரிவாக்க வேண்டும் என்ற ஆசை எல்லா அரசர்களுக்கும் இருந்தது. மற்ற ராஜ்ஜியங்களைப் பிடிக்க வேண்டும், அதற்குப் போரிட வேண்டும் என்றால் பக்கத்து நாட்டு அரசனுடன் கூட்டு சேர்ந்து கொள்வது. நம் எதிரியின் எதிரி நம் நண்பன் என்ற கொள்கையையே எல்லா அரசர்களுக்கும் கடைபிடித்தார்கள். இந்திய நாட்டின் வளங்களைக் கேள்விப்பட்டு இங்கு வியாபாரம் செய்ய வந்த அந்நிய நாட்டினர் இந்த அரசர்களுக்குள் நிலவி வந்த ஒற்றுமையின்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நம் நாட்டை தங்கள் வசப்படுத்தினர்.

ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல; பிரான்சு மற்றும் போர்ச்சுகல் நாட்டினரும் நம் நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றினர். சுதந்திரப் போராட்டத்திற்குப் பின் நமக்கு ஆங்கிலேய அரசிடமிருது விடுதலை கிடைத்தது. மற்ற நாட்டவரும் இந்தியாவை விட்டு வெளியேறினர். இந்தியா சுதந்திர நாடு ஆயிற்று. சுதந்திரம் கிடைத்தாலும் ஆங்கிலேய அரசின் கீழேயே தன்னிச்சையான பகுதியாக இருந்ததால், நமக்கென சொந்தமாக தனிப்பட்ட அரசியல் சட்டம் எதுவும் இருக்கவில்லை. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட கலோனியல் கவர்ன்மென்ட் ஆப் இந்தியா ஆக்ட் என்ற சட்ட வரைவையே நாம் பயன்படுத்தி வந்தோம்.  சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த சட்டமே நடைமுறையில் இருந்து வந்தது.

இந்தியா உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட, பல்வேறு மதத்தவர், இனத்தவர் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற வகையில் வாழ்ந்து வரும் நாடு. இப்படிப்பட்ட இந்த நாட்டின் சட்டங்களும் அதன்  மக்களை மனதில் கொண்டு அவர்களது நலன்களை காப்பதற்காக அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால், பிரிட்டிஷ் அரசு அளித்த சட்டம் இந்திய மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. இந்திய மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கென்று  பொருத்தமான சட்ட வரைவை உருவாக்க சட்டமேதை திரு பி.ஆர் அம்பேத்கர் தலைமையில் 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் இந்தியாவின் பல்வேறு துறையைச் சேர்ந்த அறிஞர்கள் இடம் பெற்றனர்.
அவர்கள் விவரம் கீழே:
திரு பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்
திரு கன்னையாலால் முன்ஷி (மும்பை மாகாணத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்)
திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (மதராஸ் மாகாணத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்)
திரு என். கோபாலஸ்வாமி அய்யங்கார் (ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் முன்னாள் பிரதமர், பின்நாளில் நேருவின் அமைச்சரவையின் உறுப்பினர்)
திரு பி.எல். மிட்டர் (இந்தியாவின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்)
திரு முஹம்மது சாதுல்லா (அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியின் உறுப்பினர்)
திரு டி.சி. கைதான் (கைதான் வணிகக் குழுவின் தலைவர் மற்றும் பிரபல வழக்குரைஞர்)
இந்த மிகப்பெரிய பொறுப்பை நிர்வகிக்கவும், மேலாய்வு செய்யவும் சட்டமேதை சர். பெனகல் நரசிங்கராவ் நியமிக்கப்பட்டார். இவர் பின்னாளில் சர்வதேச நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக பணிபுரிந்தார். இந்த அறிஞர் பெருமக்களில் டி.சி. கைதான் திடீரென காலமாகவே, திரு டி.டி. கிருஷ்ணமாச்சாரி இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்த அறிஞர்களால் வடிவமைக்கப்பட்ட சட்ட வரைவு நவம்பர் திங்கள் 4ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 166 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காகவும், திருத்தங்களுக்காகவும், ஒப்புதலுக்காகவும் இந்த வரைவு வைக்கப்பட்டது. சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டம்’ 24-1-1950 அன்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட படிவங்களில் கையெழுத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டது. இரண்டு நாட்கள் கழித்து 26.1.1950 நடைமுறைக்கு வந்தது.

26 ஆம் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. 1930 ஆம் ஜனவரி 26 ஆம் நாள் பூரண சுயராஜ்யம் என்ற பிரகடனத்தை இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் அதேநாளில் இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10.18 மணிக்கு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் பதவியேற்றார்.  

குடியரசு நாடாக ஆனபின் நமது கனவான பூரண சுயராஜ்யம் அதாவது தன்னாட்சி நிறைவேறியதா?


அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.