0 இந்தியா முழுவதும் பின்பற்றலாம் அருமையான ஆம் ஆத்மியின் பட்ஜெட்

தில்லியில் புதிய வரிகளில் அல்லாத, மதிப்புக் கூடுதல் வரி விதிப்பை முறைப்படுத்தி ரூ. 46 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்தது. இதில் கல்வித் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் முக்கியத்துவம் அளித்து அதிகப்படியான நிதியை தில்லி அரசு ஒதுக்கி உள்ளது.

தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது நாள் அலுவல் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா தாக்கல் செய்து பேசியதாவது:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதியை செய்யவும், தில்லி அரசின் திட்டங்கள் சாதாரண மக்களையும் சென்றடையும் வகையிலும் மாவட்ட நிர்வாகங்களை "இ-டிஸ்ரிக்ட்' என்ற பெயரில் கணினிமயமாக்கியுள்ளோம்.

வைஃபை வசதி: உள்கட்டமைப்பின் முக்கிய அம்சமான "வைஃபை நெட்வொர்க்' (கம்பியில்லா இணைய வசதி) திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆரராய்ந்து வருகிறோம். பட்ஜெட் உருவாக்கத்தில் பொது மக்கள் பங்கேற்க வகை செய்யும் "ஸ்வராஜ் நிதித் திட்டம்' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு மொஹல்லா சபாவுக்கும் நிதி வழங்கப்படும். "சிட்டிசன் லோக்கல் ஏரியா டெவலப்மன்ட்' திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 350 கோடி ஒதுக்கப்படுகிறது.

கல்வித் துறைக்கு ரூ.10,690 கோடி: தில்லி அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த முதல் கட்டமாக பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு; இரண்டாம் கட்டமாக திறமையான ஆசிரியர்களை நியமிப்பது; மூன்றாம் கட்டமாக பாடத்திட்டத்தை மேம்படுத்துவது என்ற வகையில் கல்வித்துறையை மேம்படுத்தி வருகிறோம்.

தற்போது, 8 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர்களுக்கு தரமான பல்கலைக்கழங்கள் மூலம் பயிற்சி வழங்க ரூ.102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் விளையாட்டுப் பள்ளி, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை ரூ. 48 கோடி செலவில் தொடங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். பள்ளிகள் மாணவர்களுக்கு திறன் கல்வியை வழங்க ரூ. 152 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 10,690 கோடி ஒதுக்கப்படுகிறது.

சுகாதாரத்திற்கு ரூ.5,259 கோடி: தரமான சுகாதார சேவை ஏழை மக்களின் குடியிருப்பு வரை சென்றடைவதை உறுதி செய்ய இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மொஹல்லா கிளினிக்குகள் தொடங்கப்படும். 150 பாலி கிளினிக்குளும் தொடங்க உத்தேசித்துள்ளோம். சில மருத்துவமனைகள் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ. 5,259 கோடி ஒதுக்கப்படுகிறது.

போக்குவரத்து: தாழ்தள சொகுசு ரக 1000 புதிய பேருந்துகள், "கிளஸ்டர்' திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளோம். துவாரகாவில் சுமார் 1,397 பேருந்துகள் நிற்கும் வகையில் புதிய ஐஎஸ்பிடி பேருந்து நிலையத்தை தனியார் - அரசு கூட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இ-ரிக்ஷாக்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ. 15 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தப்படும். பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களின் விற்பனையை ஊக்கவிக்க அந்த வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படும். பொதுப் போக்குவரத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 1,735 கோடி ஒதுக்கப்படுகிறது.

சாலைத் திட்டங்கள்: ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் தொடங்கி ஐஎன்ஏ வரையில் ரூ. 1,261 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாரபுல்லா 2-ஆவது கட்ட மேம்பாலச் சாலைத் திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும்.

ஆனந்த் விஹார் முதல் பீராகரி வரையிலான 29 கி. மீட்டர் தொலைவுடைய கிழக்கு மேற்கு காரிடர் திட்டம், வாஜிராபாத் முதல் ஏர்போர்ட் வரையிலான 25 கி.மீ. தூரமுள்ள வடக்கு-தெற்கு சாலை இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கவும், பாதசாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சாலைகளை உருவாக்க 11 சாலைகள் மறுநிர்மாணம் செய்யப்படும். சாலை திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 2,208 கோடி ஒதுக்கப்படுகிறது.

சமூகப் பாதுகாப்பு: கீதா காலனி, ஜனக்புரி, சரிதா விஹார், வசந்த் குன்ஜ் ஆகிய பகுதிகளில் முதியோர் இல்லங்களுக்காகவும், மனவளர்ச்சிக் குன்றியோர் தங்குவதற்கு உஸ்மான்பூர், தல்லுபுரா பகுதிகளில் இல்லம் கட்டுவதற்கும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லியில் 42 ஆயிரம் இருள் சூழ்ந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் போதுமான தெரு விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். சமூகப் பாதுகாப்பு, சமூக நலத்துறைத் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 1,381 கோடி ஒதுக்கப்படுகிறது.

குடிநீர் விநியோகம்: 2017-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் அளிக்கப்படும். வரும் நிதியாண்டில் 300 அங்கீகாரமற்ற காலனிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 1,976 கோடி ஒதுக்கப்படுகிறது.

கலை, கலாசாரம்: தில்லியில் கலை, கலாசாரம், மொழி மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் ரூ. 54 கோடி ஒதுக்கப்படுகிறது. சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 10 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

ஆம் ஆத்மி உணவகங்கள்: தில்லிவாழ் ஏழை தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு குறைந்த விலையில் ஆரோக்கியமான உணவு கிடைத்திடும் வகையில் "ஆம் ஆத்மி உணவகங்கள்' விரைவில் தொடங்கப்படும். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார் மணீஷ் சிசோடியா.

மேற்கண்ட பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு தில்லி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதன்படி திட்டமிட்ட செலவினமாக ரூ. 20,600 கோடியும் திட்டமிடப்படாத செலவினங்களுக்காக ரூ. 26,000 கோடியையும் தில்லி அரசு ஒதுக்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* கல்வித் துறைக்கு ரூ.10,690 கோடி.

* சுகாதாரத் துறைக்கு ரூ.5,259 கோடி.

* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,735 கோடி.

* மூன்று மாநகராட்சிகளுக்கும் ரூ.6,919 கோடி நிதி.

* பெண்கள் பாதுகாப்புக்கு ரூ.1,068 கோடி.

* சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களுக்கு ரூ.1,381 கோடி.

* ஆம் ஆத்மி உணவகங்கள் அமைக்க ரூ.10 கோடி.

* அரசு பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி.