0 தன்னாட்சி - (3) கொக்கின் வாயிலிருந்து தவளையின் வாயில்


தன்னாட்சி என்பது ‘கொக்கின் வாயிலிருந்து தப்பித்து பாம்பின் வாயில் விழுந்த கதைபோல ஆகிவிடக்கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன் - காந்திஜி


முதல் இரண்டு பகுதிகளில் குடியரசு என்றால் என்ன என்றும், உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களாகிய நம்முடைய உரிமை வாக்களிப்பது என்றும், அது நம் கடமை என்றும் பார்த்தோம்.

இனி தன்னாட்சியின் உண்மையான பொருள் என்ன? அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன? அதை அடைய வழி என்ன? என்பதைப் பார்ப்போம். காந்திஜி இதைத்தான் சுயராஜ் என்றார். நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அந்தத் தலைப்பிலேயே தனது புத்தகத்தையும் எழுதினர். நம் தலைவர்  உண்மையில் ஒரு தீர்க்கதரிசி. காந்தி அன்று சொன்னதை எல்லா தலைவர்களும் மறந்து விட்ட நிலையில் திரு ஏ.கெ. தான் அதை மறுபடியும் உயிர்ப்பித்து தமது கட்சியின் கோஷமாக வைத்திருக்கிறார்.

நமது சுதந்திரப் போராட்டத்தின் போதே பூரண சுயராஜ்யம்அதாவது தன்னாட்சி என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. அதாவது  நம்மை நாமே ஆண்டு கொள்ளும் உரிமை. ஆனால் நடந்தது என்ன? ஆங்கிலேய ஆட்சியின் போது நாம் அவர்களால், லண்டனிலிருந்து ஆளப்பட்டோம். சுதந்திரத்திற்குப் பின் நம் நாட்டவர்களால் தில்லி போன்ற நகரங்களிலிருந்து ஆளப்படுகிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நோக்கமான தன்னாட்சி நமது நாடு குடியரசு ஆனபின் அடியோடு காணாமல் போய்விட்டது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் பொதுமக்களின் நன்மை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆள்பவரின் நன்மை முன்னுக்கு வந்துவிட்டது!

“தன்னாட்சி என்றால் இந்திய நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் சுதந்திரம் வேண்டும். ஆங்கிலேயர்களின் கைப்பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல; எல்லாத்தளைகளிலிருந்தும் விடுதலை வேண்டும். ‘கொக்கின் வாயிலிருந்து தப்பித்து பாம்பின் வாயில் விழுந்த கதை’ போல ஆகிவிடக்கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன்” என்று தன் கருத்தைத் தெளிவாகக் கூறுகிறார் காந்தி.

அதென்ன கதை என்று அறிய ஆவலாக இருக்கிறீர்களா? இதோ கதை: ஒரு குளத்தில் நிறைய தவளைகள் வாழ்ந்து வந்தன. சுதந்திரமாக ஓடியாடித் திரிந்து கொண்டிருந்த அவைகளுக்கு ஒருநாள் திடீரென ஞானோதயம் பிறந்து, நமக்கு அரசன் என்று யாருமே இல்லையே! நம்மை ஆள ஒருவர் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே கடவுளிடம் போய் எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும் என்று கேட்டன. கடவுள் ‘சரியான முட்டாள்கள்’ என்று நினைத்துக் கொண்டு ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்து குளத்தில் போட்டார். ‘தடார்’ என்ற சத்தத்துடன் அந்த மரக்கட்டை தண்ணீரில் வந்து விழுந்தது. தவளைகள் அரசரைப் பார்த்து பயந்து போய் ஒளிந்துகொண்டன. சிறிது நேரத்தில் அவைகளுக்கு அது ஒரு மரக்கட்டை என்று தெரிந்து போயிற்று. உடனே அதன் மேல் ஏறி விளையாடின. ‘ஆடாத அசையாத அரசன்’ என்று கேலி செய்தன. மறுபடியும் கடவுளிடம் அரசன் வேண்டும் என்று வேண்டின. கடவுள் ஒரு கொக்கை அனுப்பினார். அந்த கொக்கு அரசன் பலவீனமாக இருந்த தவளைகளை விழுங்க ஆரம்பித்தது. எல்லாத் தவளைகளுக்கும் உயிர் பயம் வந்துவிட்டது. மீண்டும் கடவுளிடம் இந்த அரசனை விட பலசாலியான இன்னொரு அரசனை அனுப்பச் சொல்லிக் கேட்டன. கடவுளும் பாம்பு ஒன்றை அனுப்பினார். சரசரவென்று வந்து தன் பங்கிற்கு தவளைகளை விழுங்க ஆரம்பித்தது பாம்பு அரசன்!

கதையின் நீதி புரிந்திருக்கும். சுதந்திரமாக இருந்த நாம் ஆங்கிலேயர்களிடம் அகப்பட்டு அடிமைகள் ஆனோம். இப்போது அவர்களிடமிருந்து தப்பி நம்மவர்களிடம் அடிமைகள் ஆகிவிட்டோம்!  

தன்னாட்சி என்பது ஒரு புனிதமான சொல். ஒரு மறைச்சொல். நம்மை நாமே ஆள்வது மட்டுமல்ல; நமக்கு நாமே சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அவ்வழி நடப்பது தான் தன்னாட்சி. ‘சுதந்திரம்’ என்ற சொல் கூறும் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை என்ற பொருள் இங்கு கிடையாது. உபநிடதத்தில் இச்சொல் தன்னை வெற்றி கொள்ளுதல், துயரங்களிலிருந்து விடுபடுதல் என்ற பொருளிலேயே சொல்லப்படுகிறது. தன்னை வென்று, சுயாட்சி பெற்று, சுய மரியாதையோடு, பிறரை மதித்தும் வாழும்  மனிதர்களைக் கொண்ட அமைப்பே காந்திஜி கூறும் தன்னாட்சி.

தன்னாட்சியின் முக்கிய நோக்கங்கள் என்ன?

·         வல்லாதிக்கத்தை எதிர்த்தல்
·         நாம் சுதந்திரமாக வாழ்தல் மட்டுமின்றி மற்றவர்களின் சுதந்திரத்தையும் மதித்தல்
·         எனக்கு என்ன வேண்டும் என்று நாமாகவே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை
·         சுயேச்சையாக முடிவுகளை எடுப்பது
·         நடுநிலைமை வகித்தல்
·         தன்னைத் திருத்திக் கொள்ளுதல், தன்னைப் பண்படுத்திக் கொள்ளுதல்
·         அடக்குமுறைக்கு பணிய மறுப்பது  
·         அடக்குமுறையைக் கையாளவும் மறுப்பது

இந்தத் தன்மைகள் இருப்பதனாலேயே தன்னாட்சி என்பது ஏழைக்கும் - பணக்காரனுக்கும், வலியவனுக்கும் - எளியவனுக்கும், ஆள்பவனுக்கும் - ஆளப்படுபவனுக்கும் இடையே பாலமாக இருக்கிறது.

‘நான் கனவு காணும் தன்னாட்சியில் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஒரு இளவரசனைப் போல, ஒரு பணக்காரனைப் போல ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். அதற்காக நமக்கு அரண்மனைகள் தேவையில்லை. அரண்மனைகள் மகிழ்ச்சியைக் கொண்டு வராது. ஆனால் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். அதுவே முழுமையான தன்னாட்சி’ என்கிறார் நம் தேசப்பிதா ‘யங் இந்தியா’ என்ற பத்திரிகையில் அவர் எழுதி வந்த தன்னாட்சி பற்றிய கட்டுரையில்.

அவர் அந்தக் கட்டுரையில் மேலும் கூறுகிறார்: ‘சிலர் சொல்லுகிறார்கள் இந்திய அரசாங்கம் நம் கைகளில் வரட்டும். பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று. இதைப்போல ஒரு மூட நம்பிக்கை வேறெதுவும் இல்லை. தன்னாட்சி என்றால் நம் ஆட்சி. நம்மை நாமே நமக்காக ஆண்டு கொள்வது. நம் ஊர், நம் சமூகம், நம் கிராமம் என்று நமக்கு என்ன வேண்டும், நம் நலனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் தீர்மானிக்கும் நிலை. தன்னாட்சி என்பது ஒரு சிலர் மட்டும் அதிகாரம் பெற்றிருப்பது அல்ல. அதிகாரத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தும்போது அதைத் தட்டிக் கேட்கும் துணிவை நாம்  எல்லோரும் பெற்றிருப்பது தான் தன்னாட்சி.

சுயாட்சி மலர என்ன  செய்யவேண்டும்? அடுத்த பகுதியில் பார்ப்போம்.