0 தன்னாட்சி - (10) பழங்குடியினரின் திண்டாட்டம்!கனிம வளங்களும், நிலங்களும் தனியார் நிறுவனங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போவதுபோல நமது காடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கப்பட்டு வருகின்றன - அர்விந்த் கெஜ்ரிவால்


நிலங்களையும், கனிம வளங்களையும் ருசி பார்த்த தனியார் நிறுவனங்கள் காட்டுப்பகுதிகளை விடுவார்களா? ஆங்கிலேயர்கள் காலத்திலேயே காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தவரின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர்கள் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டி வந்தது. மொத்த நாட்டுக்கும் ஆன சட்டதிட்டங்கள் பழங்குடியினரின் பகுதிகளுக்குச் செல்லுபடி ஆகாது. அதனால் காட்டுப்பகுதியில் தங்கள் நேரடி கட்டுப்பாடுகளை ஆங்கிலேயர்கள் விலக்கிக்கொண்டு விட்டனர். இந்த நிலை 1947 ஆம் ஆண்டிற்கு முன். 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது பழங்குடியினரின் நிலங்களும் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டவை என்று பிரகடனப் படுத்தப்பட்டன.


பாவம் பழங்குடியின் மக்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவர்கள் அந்த நிலங்களில் வசித்து வந்தாலும் அவை தங்களுடையவை என்று நிரூப்பிக்க அவர்களிடம் தேவையான, போதுமான ஆவணங்கள் இல்லை. இதை மற்றவர்கள் அனுகூலமாக எடுத்துக் கொண்டு அவர்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொண்டனர். அங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த பழங்குடிகள் அந்த நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை என்ற சட்டத்தின் காரணமாகவே குற்றவாளிகள் ஆனார்கள்.


பெரிய அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்கள்வரை பழங்குடி இனத்தவர்களை பலவகையிலும் துன்புறுத்த ஆரம்பித்தனர். விவசாயம் செய்யத் தடை விதிக்கப்பட்டது மட்டுமல்ல; ஆடுமாடுகளை மேய்ப்பது, மரங்களை வெட்டுவது கீழே விழும் பழங்களைப் பொறுக்குவது என்று எல்லாவற்றிற்கும் தடை விதித்தனர். அவர்களது நிலங்களைத் துவம்சம் செய்தனர். மீண்டும் பயிர் செய்ய முடியாதபடி இரசாயனங்களைத் தூவினர். ஒருபுறம், காட்டு நிலப்பகுதிகளைக் காக்க ஒரு சில வனத்துறை அதிகாரிகள் முயன்றனர். இன்னொரு புறம் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு காட்டு நிலப்பகுதிகளை சூறையாடி வந்தனர்.


சில நிறுவனங்களுக்கு அரசு, காடுகளில் கிடைக்கும் இலைகளை சேகரிக்க உரிமம் வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனங்கள் தங்களுக்கு லாபம் சம்பாதிப்பதை முக்கியக் குறிக்கோளாக வைத்திருக்கிறார்களே தவிர, இவர்களுக்கு இந்த இலைகளை சேகரிக்க உதவும் பழங்குடி மக்களுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கிறார்கள். மூங்கில் சேகரிக்க அனுமதி பெற்றுள்ள தனியார் நிறுவனங்களும் பழங்குடி மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.


அடுத்தபடியாக நீர் வளம். தனியார் நிறுவனங்கள் சில நம் நாட்டு நதிகளை வாங்கிவிட்டன என்றே சொல்லவேண்டும்.  நம்நாட்டில் பல இடங்களில் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சத்தீஸ்கர் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு ஓடும் ஷிவ்நாத் நதி ஒரு தனியார் நிறுவனத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. அதனால் இப்போது அந்த நதியிலிருந்து யார் நீர் பயன்படுத்த வேண்டும் என்றாலும் – அது பாசனத்துக்கோ, குடிநீராகவோ – அந்த நிறுவனத்தின் அனுமதி வேண்டும்.
நாட்டில் இருக்கும் அத்தனை நதிகளிலும் அணைகள் கட்டப்பட்டுவிட்டன. கங்கை நதியில் கட்டப்பட்டிருக்கும் அணைகளின் எண்ணிக்கையால் இனி அந்த நதியே இல்லை எனும் நிலைகூட உண்டாகலாம். அல்லது கங்கை என்னும் பெரிய நதி இரு அணைகளுக்கு இடையே ஓடும் அளவிற்குக் குறுகிப் போகலாம். நாட்டின் மின்தேவைகளை பூர்த்தி செய்ய இந்த அணைகள் கட்டப்படுகின்றன என்றாலும் நதி கொஞ்சமாவது மிஞ்ச வேண்டுமே!


பல நதிகளின் குறுக்கே அணை கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை இவர்கள் செய்யும் வேகத்தைப் பார்த்தால் இவர்களுக்கு நாட்டின் மீது அக்கறையா அல்லது தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் லஞ்சத்தின் மீது அக்கறையா என்று கவலை ஏற்படுகிறது.


ஊழல்வாதிகளும், பேராசை பிடித்த அரசியல்வாதிகளும் நம் இயற்கை வளங்களை நம் கண் முன்னாலேயே அழித்துவிடுவார்கள் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இவர்களிடம் சிக்கி நம் இயற்கை வளங்கள் பெரும் அபாயத்தில் இருக்கின்றன. நாம் உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்காவிட்டால், நம் நாட்டையே இவர்கள் விற்றுவிடுவார்கள் என்பது நிச்சயம்.


மேற்கண்ட உதாரணங்களிலிருந்து இந்த அரசு என்கிற ஒட்டுமொத்த அமைப்பும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறது. அரசு ஊழியர்களை எதிர்த்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. அரசின் கொள்கைகளில் நமது பங்கு பூஜ்யம். சட்டங்கள் நம்மைக் கேட்காமலேயே இயற்றப்படுகின்றன. நாடாளுமன்றம், சட்டமன்றம் இவற்றின் செயல்பாடுகளுக்கும், நமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. நமது நீர்வளம், நிலவளம், காடுகள் ஆகியவை நம்மைக் கேட்காமலேயே, எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகளே இல்லாமல் ஈவு இரக்கமற்றவர் அரசியல்வாதிகளால் விற்கப்படுகின்றன. இதுதான் ஜனநாயகமா?

‘ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களித்துவிட்டு, அவர்கள் செய்வதையெல்லாம் வாய்மூடி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதன் பெயர் ஜனநாயகமா?’ தனது புத்தகத்தில் இது போன்ற பல பல கேள்விகளை கேட்கிறார் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவரே பதிலும் சொல்லுகிறார் கேளுங்கள்:


இதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; எங்கேயோ தவறு நேர்ந்திருக்கிறது. நமது அடிப்படை பிரச்னை என்ன என்று ஆராய்ந்தால் தவறு புரியும். ஜனநாயகம் என்ற பெயரில் ஒருசிலர் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது புரியும். வெறுமனே வாக்களித்துவிட்டு தலையாட்டி பொம்மைகளாக வாழும் ஜனநாயகம் நமக்குத் தேவையில்லை. அரசின் நிர்வாகத்தில் மக்களுக்கு நேரடிப் பங்கு வேண்டும். அந்தக் காலத்தில் நடந்தது போல மக்களின் முடிவுகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இதுவே உண்மையான ஜனநாயகம்.


ஆங்கில அரசாட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட கிராம சபைகள் இயங்கி வந்தன. குடிநீர், கல்வி எல்லாவற்றையும் இந்த சபைகளே நிர்வகித்து வந்தன. பிறகு என்னவாயிற்று?


அடுத்த பகுதியில் பார்ப்போம்.