0 தன்னாட்சி - (13) வீதியில் போடப்பட்ட பட்ஜெட்!

மக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றை உள்ளடக்கிய பட்ஜெட் போடும் நாள் விரைவில் வரவேண்டும் – அர்விந்த் கெஜ்ரிவால்

நம்நாட்டில் அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்தோம். இதுதான் ஜனநாயகமா என்றொரு கேள்வியையும் முன் வைத்தோம். மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், வாருங்கள்.


செல்வச் செழிப்பு மிக்க அமெரிக்காவில் உள்ளாட்சி, ஊராட்சி, நகராட்சி உட்பட ஒட்டுமொத்த நாட்டின் தீர்மானங்கள் எல்லாமே மக்களின் பங்களிப்புடன்  தான் எடுக்கப்படுகின்றன. ஒரு சில ஊர்களில் வாராந்திரக் கூட்டங்கள் தவறாமல் நடக்கின்றன. மிடில் டவுன் என்ற ஊரின் இணையதளத்திற்குச் சென்று பார்த்தால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடப்பது தெரிய வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளுகிறார்கள். அந்த ஊர் மக்கள் எல்லோரும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கபடுகிறார்கள். எல்லா விஷயங்களிலும்  பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. அந்த ஊர் நிர்வாகம் அதன்படியே நடந்து கொள்ளுகிறது. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?


அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் நம் நாட்டில் தன் சந்தையை விரிக்க ஆவலாக இருக்கிறது. அமெரிக்காவில் இந்த நிறுவனத்திற்கு விழுந்த அடி உங்களுக்குத் தெரியுமா? இதோ கேளுங்கள்: அமெரிக்காவில் ஓரேகான் மாவட்டத்தில் வியாபார மையம் ஆரம்பிக்க நினைத்தது இந்த நிறுவனம். அந்த ஊரில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் இந்த நிறுவனம் இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கலாமா என்று கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. டவுன் ஹாலுக்கு எல்லோரையும் வரும்படி அழைக்கப்பட்டனர். வால்மார்ட் நிறுவனம் நம் ஊருக்கு வந்தால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பொதுமக்கள் வால்மார்ட்டிற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தனர்.  மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பல்லவா? சொந்த நாட்டிலேயே வியாபாரம் செய்ய முடியவில்லை வால்மார்ட் நிறுவனத்தால். ஆனால் நம் நாட்டில் நம்மைக் கலந்தாலோசிக்காமலேயே இந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள்! இதையெல்லாம் எங்கு சொல்லி அழ?


பிரேசில் நாட்டில் என்னவாயிற்று என்று பார்ப்போம், வாருங்கள்:


பிரேசில் நாட்டில் போர்ட்டோ அலிக்ரி என்று சிறிய ஊர். இந்த ஊரின் மக்கள் தொகையில் சுமார் 40% சேரிகளில் வசிக்கிறார்கள். 1990 ஆம் ஆண்டு இந்த ஊரில் உழைப்பாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது.  மிகவும் பின்தங்கிய ஊர் ஆகையால் அங்கு அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் அகற்றும் அமைப்பு எதுவும் கிடையாது. படிப்பற்றவர்கள் ஏராளம், ஏராளம். ஆட்சிப் பொறுப்பை ஏற்று கொண்ட உழைப்பாளர் கட்சி பட்ஜெட் பற்றி யோசித்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது. அந்த வருட பட்ஜெட் மாநகராட்சிக் கூட்டத்திலோ, குழுக் கூட்டத்திலோ தீர்மானிக்கப்படாது. பதிலாக அந்த ஊரின் தெருக்களில் தீர்மானிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஊரை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு வருட  ஆரம்பத்திலும் மக்கள் தங்கள் பகுதிகளில் குழுமி, தங்கள் தேவைகளை முன் வைத்தார்கள்.


எல்லோருக்கும் அடிப்படை தேவைகள்தான் வேண்டியிருந்தது. சாலைகள், குடிநீர், கழிநீர் அகற்றும் வசதி முதலியவை வேண்டும் என்றார்கள். அந்த ஊரில் இருக்கும் பள்ளிகளில் அதிக ஆசிரியர் வேண்டும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர். எல்லார் சொன்னதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பட்ஜெட் போடப்பட்டது. முதல் தேவை, இரண்டாவது தேவை என்று வகைப்படுத்தப்பட்டு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அவற்றிற்குத் தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இதன் பின்விளைவுகள் என்னென்ன என்று பார்ப்போம். நிச்சயம் சிறப்பானதாகத்தான் இருக்கும், இல்லையா? மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்யும் கட்சியின் முயற்சிகள் தோல்வி அடைந்ததாக சரித்திரமே இல்லையே. பிரேசிலிலும் அதே தான் நடந்தது. உழைப்பாளர் கட்சி 15 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தலில் வெற்றி வாகை சூடி வருகிறது. உலக வங்கியே இந்த முயற்சியைப் பாராட்டி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 98% வீடுகளில் குடிநீர் வசதி ஏற்பட்டுள்ளது. 87% வீடுகளில் கழிவு நீர் வெளியேற்றம் நடந்து வருகிறது. கல்வி பற்றி சொல்லவே வேண்டாம். 100% மக்கள் கல்வியறிவு உள்ளவர்களாகி விட்டனர். ஊழல் பெருமளவில் குறைந்து விட்டதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.


இதைப்போல நம்மூரில் வீதியில் பட்ஜெட் போடும் நாள் வரவேண்டும். மக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவற்றை உள்ளடக்கிய பட்ஜெட் போடும் நாள் விரைவில் வரவேண்டும் என்கிறார் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால்


அடுத்தபடியாக, சுவிட்சர்லாந்து நாட்டைப் பார்க்கலாம். உலகின் மிகச்சிறந்த ஜனநாயகம் என்ற பாராட்டைப் பெற்றது இந்த நாடு. அரசியல் அமைப்புத் சட்டத்தில் மக்களுக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது. 50,000 பொதுமக்கள் கையெழுத்திட்டு மனு அனுப்பினால் அந்த நாட்டில் அது சட்டமாகும். ஒரு சட்டத்தில் அது சரியாக இல்லை என்று 100,000 பேர்கள் கையொப்பம் இட்டு மனு அனுப்பினால் அந்த சட்டத்தில் திருத்தம் வரும்.


நம்நாட்டில் 50,000 பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பினால் அது வந்து சேர்ந்தது என்று அரசிடமிருந்து ஒரு பதில் கூட வராது. மற்ற நாடுகளில் ஜனநாயகம் சிறப்பாக செயல்பட மக்களின் நேரடிப் பங்கு ஆட்சியில் இருக்கிறது. இதன் காரணமாகவே அந்த நாடுகள் மேலும் மேலும் சிறப்பாக ஆகிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டில் நிலைமை மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் போராட வேண்டுமோ, தெரியவில்லை.


ஆங்கிலேயர்கள் காலத்திலும் நம் உரிமைக்காக நாம் போராடினோம். இப்போதும் நம்மவர்களின் ஆட்சியிலும் போராடித்தான் ஒவ்வொன்றையும் பெற வேண்டியுள்ளது. நமது வாக்குகளினால் அவர்களுக்குக் கிடைக்கும் எல்லையற்ற அதிகாரத்தை நம் அரசியல்வாதிகள் வாக்களித்த மக்களுக்கு  எதிராக பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலைமை மாற நமக்கு சுயாட்சி வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சியும், அதன் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் - ம் பாடுபட்டு வருகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.

மேலும் பார்ப்போம்.....