0 தன்னாட்சி - (4) தன்னாட்சி பற்றிய விழிப்புணர்வு தேவை


சுயாட்சி என்பது பெரும்பான்மையினரிடம் அதிகாரம் இருப்பது என்று நினைத்தீர்களானால் அதைவிடப் பெரிய தவறு வேறு கிடையாது
                                                  மகாத்மா காந்தி                                                       
M_Id_453063_Arvind_Kejriwal.jpg (415×252)

தன்னாட்சி  மலர என்ன  செய்யவேண்டும்?

தன்னாட்சி என்பது மக்களிடையே விழிப்புணர்வை - அவர்களது உண்மையான ஆர்வம், தகுதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. அவர்களிடையே ஒற்றுமை, ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை, (தன்னிடமிருந்தும், வெளியிலிருந்தும் வரும் ஆக்கிரமிப்பு உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் என்று கூட கொள்ளலாம்) இவற்றால் ஏற்படும் படிப்படியான பொருளாதார முன்னேற்றம். இதை ஒவ்வொரு ஆணும், பெண்ணும் உணரவேண்டும்.


எவை எவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படவேண்டும்?

·         நமக்குத் தேவையானவற்றை நாமே பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவது நாம் வைக்கும் முதல் அடியாக இருக்கவேண்டும் என்கிறார் திரு.அரவிந்த் கெஜ்ரிவால்
·         எந்த ஒரு ஜாதியையோ, இனத்தையோ, மதத்தையோ இந்த தன்னாட்சி ஏற்பதில்லை. அதேபோல படித்தவர்கள், பணக்காரர்கள் இவர்களின் அதிகாரம் இங்கு செல்லாது. பசியால் வாடும், வறுமையில் துன்புறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்காகவும்  இந்த தன்னாட்சி வேண்டும். இந்த தன்னாட்சி என்பது நமது தலைவரின் மிகப்பெரிய கனவு.


·         தன்னாட்சி என்பது பெரும்பான்மையினரிடம் அதிகாரம் இருப்பது என்று நினைத்தால் அதைவிடப் பெரிய தவறு வேறு கிடையாது. மக்களுடைய ஆட்சி நீதியின் பெயரால் நடைபெற வேண்டும். எந்த ஜாதி, இனம், மதத்தை சேர்ந்தவராக இருப்பினும் எல்லோருக்கும் ஒரே நீதி.
·         தன்னாட்சியில் எல்லோருடைய குரல்களும் கேட்கப்பட வேண்டும். நம் கருத்துக்கு எதிராக ஒருவர் பேசினால் அதைப் புரிந்து கொண்டு அதை மதிப்போம். அப்போதுதான் நாம் பேசுவதை நம் எதிரிகள் கேட்பார்கள். ஆரோக்கியமான பொது வாழ்க்கைக்கு இந்தப் போக்கு மிகவும் முக்கியம்.


யார் நமக்கு இதைக் கொடுப்பார்கள்?

இந்த தன்னாட்சியை யாராலும், கடவுளாலும் கூட வழங்க முடியாது. நமக்கு நாமே வழங்கிக் கொள்ள வேண்டும். யாரும் கொடுத்துப் பெறுவதில்லை தன்னாட்சி. ஒரு தேசம் இன்னொரு தேசத்திற்கு இதனை பரிசாகக் கொடுக்க முடியாது. அந்தந்த நாடுகளில் இருக்கும் நல்லியதத்தவர்களால் மட்டுமே வாங்க முடியும். மக்களாகிய நாம் நமக்கே கொடுத்துக் கொள்ளும் பரிசு இது. விலைகொடுத்து வாங்கினால் அது பரிசாகாது. தன்னாட்சி வானத்திலிருந்து வராது. பொறுமை, விடாமுயற்சி, சலியாத உழைப்பு, தைரியம், சூழ்நிலையை ஆராயும் திறன் இவற்றின் மூலம் கிடைக்கும் பழம் தான் இந்த சுயாட்சி.


இதன் பாதை எப்படிப்பட்டது?

தன்னாட்சிக்கான பாதை மிகவும் வலி மிக்கது. கரடு முரடானது. அத்தனை சுலபத்தில் பெற்றுவிட முடியாது என்கிறார் திரு ஏ.கெ. சின்னச்சின்ன விவரங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பயணிப்பதற்கு முன் விரிவான ஏற்பாடுகள் வேண்டும். கிராமங்களில் உள்புகுந்து அவர்களுக்கான சேவையை செய்ய வேண்டும்.  அவர்களுக்கு தேசிய விழிப்புணர்வை ஊட்டும் தேசியக் கல்வியைத் தர வேண்டும். அது மந்திரத்தில் மாங்காயை வரவழைப்பது போல் இருக்காது. நிதானமாக மரமாக வளர்ந்து வேர்விட்டுத் தழைக்கும் ஆலமரம் போல இருக்க வேண்டும். இரத்தம் சிந்துவதால் விளையாது இந்த மரம். அவசரக் காரியம் இங்கு நடக்காது.


தங்கள் சுயத்தை மறந்த பெரும்பான்மை மக்கள் வேண்டும். நம் தலைவரைப் போல எல்லோரும் ஆர்வத்துடன் பொதுவேலைகளில் ஈடுபட வேண்டும். அவர்கள் கையாளும் வழிமுறைகள் சத்தியம் அஹிம்சை இவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.


ஒவ்வொரு கிராமமும் தன் சுய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். உணவு, உடை, சுத்தமான நீர், சுகாதார வசதி, வீடு, கல்வி முதலியன இந்த சுயதேவையில் சேரும். அதன் பிறகு இதில் அரசாங்கம், சுய பாதுகாப்பு முதலியவை பற்றி யோசிக்க வேண்டும்.


தன்னாட்சியை அடைய பயிற்சி தேவையா?

ஒரே ஒரு பயிற்சி அதாவது இந்த தன்னாட்சியை எதிர்க்கும் உலகத்தினிடமிருந்து நம்மைக் காத்துக்கொண்டு விடுதலையுடன் கூடிய இயற்கையான வாழ்வு வாழ்வதுதான் ஒரே பயிற்சி. அப்படிப் பெறும் தன்னாட்சியானது  குறைகள் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல அரசாங்கம் கூட இப்படிப்பட்ட தன்னாட்சிக்கு ஈடாகாது.


இந்த தன்னாட்சி என்பதை ஒரே நாளில் பெற்றுவிட முடியுமா?

நிச்சயம் முடியாது. முதலில் மக்களின் மனநிலை மாறவேண்டும். ‘ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன என்ற சோம்பேறித்தனமான மனநிலை முற்றிலும் மாற வேண்டும். நாம் அனைவரும் தேர்தலில் பங்கு பெற வேண்டும். நமது வாக்குரிமையை பயன்படுத்தி, உண்மையான, நாட்டு மக்களின் நலனைப் பற்றி சிந்திப்பவர்களை அதிகாரத்தில் அமர்த்த வேண்டும். ஒரு கட்சி ஆட்சியை இழந்து இன்னொரு கட்சி ஆட்சிக்கு வருவது என்ற மாற்றத்தால் மட்டும் எந்த தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது.


என் கிராமத்தில் கிடைக்கும் தண்ணீருக்கும், நிலத்துக்கும் நான் உரிமையாளன். அவற்றைக்கொண்டு என் தேவைகளை நானே பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதற்கு நான் ஏன் இன்னொருவரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். அரசாங்கத்தின்  தலையீடு இன்றி திட்டமிட்டு உழைக்கும் கிராமங்களில் வேலையில்லாத் திண்டாட்டம், பசி ஆகியவை காணாமல் போய்விட்டன.


நம் கடமை

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் நாம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். ஆனால் தேர்தலில் வாக்களிப்பதுடன் நம் கடமை முடிந்துவிடுவதில்லை. நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் நமக்கு வேண்டியதைச் செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுகிறார்களா என்று பார்க்க வேண்டும். நிர்வாகத்தில் நம் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும். அதிகார மையங்கள் தலைநகரிலிருந்து வெளியே வரவேண்டும்.


வலுவான தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு கிராமமும் தன் தேவையை தானே நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். ‘கிராம சபா’ அமைப்புகள் நன்கு இயங்க வேண்டும். தன்னாட்சி மூலம் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் நம் இந்தியாவில் பல இருக்கின்றன. அவற்றையும் நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம்.


குடியரசு என்பதன் உண்மையான பொருளை எல்லோரும் உணர வேண்டும். அதுவே இப்போது உடனடியாக தேவைப்படுவது.

குடியரசு ஆட்சியை இந்தியா எங்கே கற்றது? நமது குடியரசில் நிகழும் தவறுகள் என்ன? நாம் ஏன் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகளிடமே அடிமை போல இருக்கிறோம்? நமது குடியரசு ஆட்சியில் என்ன தவறு?

அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.