0 தன்னாட்சி 17 - நல்ல மனிதர் நம் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பாரா?

நல்ல மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் அது மட்டுமே அமைப்பைச் சீர்படுத்தி விடாது – அர்விந்த் கெஜ்ரிவால்
சென்ற அத்தியாயத்தில் நல்ல மனிதர் தலைவராக வருவதால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது என்று பார்த்தோம். இந்த வாக்கியம், இந்தத் தொடர் கட்டுரைகளைப் படிப்பவர் உள்ளத்தில் பல கேள்விகளை எழுப்பியிருந்திருக்கும். என்ன சொல்லுகிறீர்கள்? அவரால் ஏன் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது? நல்ல மனிதர்கள் நம்மை ஆளுகிறார்கள் என்றால் நமக்கு நன்மை பயக்கும் தானே?

‘எங்கள் தொகுதி எம்.எல்.ஏ மிகவும் நல்லவர். எங்கள் தொகுதி எம். பி. நாணயமானவர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.  ஒரு நல்ல மனிதரை நம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தால் அவர் நம் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார் என்று நாம் நம்புகிறோம்.
நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லுகிறார் இது முற்றிலும் தவறான நம்பிக்கை என்று. இன்னும் சற்று விளக்கமாக இங்கு பார்ப்போம்.
முதலில் நம் அரசியல் அமைப்பில் ஒரு எம்.எல்.ஏ. அல்லது ஒரு எம்.பி. யின் பங்கு என்ன என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கு ஒரு பிரச்னை என்றால் நம் தொகுதி எம்.எல்.ஏ. வை அணுகுகிறோம். அவர்களுக்கு அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் இல்லை! வியப்பாக இருக்கிறதல்லவா? இதுதான் உண்மை.

ஒரு எம்.எல்.ஏ. க்கு அல்லது எம்.பி. க்கு அவரது தொகுதி மேம்பாட்டிற்கு என்று  2 கோடி ரூபாய் ஒத்துக்கப்படுகிறது. தொகுதி மேம்பாட்டிற்கு அவர் அந்தத் தொகையைப் பயன்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதைச் சரிவரச் செயல்படுத்துகிறார்களா என்று அவரால் பார்க்க முடியாது. அதிகாரிகளும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

சட்டங்களை நிறைவேற்றுவதில் துணை நிற்கிறார்கள் என்பதுடன் அவர்களது வேலை முடிந்துவிடுகிறது. ஒரு நல்ல சட்டம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆதரவாக அவரால் வாக்களிக்க முடியாது, அந்தச் சட்டம் அவரது கட்சித் தலைமைக்குப் பிடிக்கவில்லை என்றால். அதேபோல ஒரு சட்டத்திற்கு எதிராகவும் அவரால் வாக்களிக்க முடியாது. கட்சித் தலைமை சொல்வதைத் தான் அவர் செய்ய வேண்டும்.

அதனால் ஒரு நல்ல மனிதர் சுயமாக இங்கு பணியாற்ற முடியாது என்பது நமது அரசியல் அமைப்பில் இருக்கும் ஓட்டை. சட்டம் ஒன்ற நிறைவேற்றவோ, தடுத்து நிறுத்தவோ முடியாத ஒருவரால் நமது அன்றாடத் தேவைகளை  நிறைவேற்றவும் இயலாது. நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் நம் பேச்சைக் கேட்டு நடக்க முடியாது. அவர்கள் கட்சித் தலைமை சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அப்படிக் கேட்காவிட்டால் கட்சியிலிருந்து, உறுப்பினர் பதவியிலிருந்து கூட வெளியே தள்ளப்படுவார்.

ஒரு நல்ல மனிதரை, நாணயமானவரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் இனி அவர் நம் குறைகளை தீர்த்துவிடுவார் என்று நினைப்பதில் அர்த்தம் இல்லை. மக்களுக்கோ, மக்களின் பிரதிநிதிக்கோ ஒரு அரசாங்கம் செவி சாய்ப்பதில்லை என்பது போன்ற ஒரு அமைப்பு உண்மையான ஜனநாயகம் ஆகுமா? நாம் நூற்றுக்கணக்கானவர்களைத் தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலரிடம் மட்டுமே அதிகாரம் குவிந்திருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்களின் கட்டுப்பாட்டில் அரசு இருக்க வேண்டும். மக்களின் கட்டுப்பாட்டில் இல்லாத ஜனநாயகம் மக்களின் தேவைகளை, உரிமைகளை எப்படிக் காப்பாற்றும்? அதுபோன்ற ஒரு அமைப்பைக் குறித்து நாம் பெருமைப்பட முடியுமா? உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நம் ஜனநாயகம் உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கிறது.

நல்ல மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் அது மட்டுமே அமைப்பைச் சீர்படுத்தி விடாது என்கிறார் நம் தலைவர் திரு அர்விந்த் கெஜ்ரிவால். இப்போதிருக்கும் அமைப்பில் ஒரு தனிப்பட்ட நபரின் நேர்மையால் எந்தவித பலனும் இல்லை. ‘என்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு மேல் உள்ளவர்கள் சொல்கிறபடிதானே நாம் நடக்க முடியும்?’ இதுதான் நேர்மையான அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வது.
நம் நாட்டில் நல்ல மனிதர்களும், நல்ல அமைப்புகளும் பல சிறந்த நோக்கங்களுக்காக வேலை செய்கின்றார்கள். ஆனால் அரசியல் அமைப்பை மாற்றாமல், மக்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமல் எதையும் இவர்கள் சாதித்துவிட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் சட்டங்களைத் திருத்தி எழுதினாலும், அவற்றை செயலாக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியாளரிடமோ, வேறு அரசு அதிகாரிகளிடமோ இருக்கும். அவர் சரிவர செயலாக்கவில்லை என்றால் என்ன பயன்? நம் நாட்டில் நல்ல சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை செயல்படுத்துவோர் சரியாக இல்லை.

நல்ல மனிதர்கள் இருந்தால் அமைப்பு சரியாக இல்லை. அமைப்பை சரிப்படுத்தாமல் பண்புகளை எப்படி வளர்ப்பது? தனிமனித ஒழுக்கம் கெட்டுப போகும் அளவிற்கு நம் அமைப்பு இருக்கிறதா? ஆமாம் என்று சொல்லி அதற்கு ஒரு உதாரணம் கூறுகிறார் திரு அரவிந்த் கெஜ்ரிவால்

மண்ணெண்ணெய் வியாபாரிக்கு கிடைக்கும் கமிஷன் என்ன தெரியுமா? ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 7 பைசா. 10,000 லிட்டர் விற்பவருக்கு மாதம் 700 ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு அவர் எப்படிக் குடும்பம் நடத்துவார்? கடைக்கு வாடகை கொடுப்பார்? அவர் தகிடுதத்தம் செய்தால் தான் பிழைக்க முடியும்! இப்படி ஒரு தவறான அமைப்பை உருவாக்கியதன் மூலம் எல்லா மண்ணெண்ணெய் வியாபாரிகளையும் அரசு ஊழல் செய்பவர்களாக மாற்றிவிட்டது. அரசாங்கம் இவர்களுக்குப் போதுமான கமிஷன் வழங்க வேண்டும். அப்போதுதான் இவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கலாம்.

தனிமனித ஒழுக்கம், அரசியலமைப்பை சீர் செய்வது குறித்து இங்கு நாம் பேசுவதற்கு காரணம் ஒரு நல்ல அமைப்பு தனிமனித ஒழுக்கத்தை வளர்க்கிறது. தனிமனித ஒழுக்கம் வளர வளர அமைப்பும் சீர்படும். அதேபோலவே அமைப்பு சீராக இருக்கும்போது தனிமனித ஒழுக்கம் சீர்படும்.

அரசியல்வாதிகளையும், வியாபாரிகளையும், அதிகாரிகளையும் தவறான பாதையில் போகிறார்கள் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம். அமைப்பு நல்லதாக இருந்தால் இவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள், இல்லையா?

அடுத்த பகுதியில் பார்ப்போம்.