0 தன்னாட்சி (20) மக்களின் கடமைகள்

தன்னாட்சி என்பது சட்டங்கள் இயற்றுவதிலும், திட்டங்கள் போடுவதிலும், அவற்றுக்கான நிதியிலும், இயற்கை வளங்கள் மீதும் மக்களுக்கு நேரடிக் கட்டுப்பாடு இருக்கும் என்பதே. அர்விந்த் கெஜ்ரிவால்.

kejriwal_rally_240314.jpg (666×338)

கிராமங்களுக்கு மட்டுமல்ல நகரங்களுக்கும் தன்னாட்சி வந்தால் அவைகளும் சிறப்பாக இயங்கும் என்கிறார் நம் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கிராம சபைகள் நம் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டது போல நகரங்களுக்கு எந்தவொரு சபையும் இல்லை. தில்லியில் மொஹல்லா சபாக்கள் என்று அழைக்கப்படும் சமுதாய கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனாலும் மக்கள் பலவிடங்களில் மிகுந்த முனைப்புடன் இந்தக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.  மக்கள் உள்ளூர் பிரச்னைகளையும் தேவைகளையும் பற்றிப் பேசி தாங்களாகவே முடிவெடுக்கிறார்கள். இந்த சபாக்களின் தலைவர்களும் அதிகாரிகளும் அவற்றைச் செயல்படுத்துகிறார்கள். இத்தகைய வியக்கத்தக்க மாற்றங்கள் தில்லி மாநகராட்சியின் திரிலோக்புரியிலும் சுந்தர் நகரியிலும் நடைபெற்று வருகிறது.
இது எப்படி சாத்தியமாயிற்று என்று பார்ப்போம்:
ஒவ்வொரு வார்டும் பத்து சமூகக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இவை ஒவ்வொரு மாதமும் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
முதியோர் உதவித்தொகை, ஊனமற்றோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை போன்ற திட்டங்களில் யாருக்கெல்லாம் உதவ வேண்டும் என்கிற பட்டியலை சமூக அமைப்பே விவாதித்து வெளிப்படையாக தயாரிக்கிறது. செய்ய வேண்டிய வேலை அதிகமாகவும் நிதி குறைவாகவும் இருந்தால் முக்கியத்துவ வரிசையில் வேலைகள் பட்டியலிடப்பட்டு நிதி ஒதுக்கப்படுகின்றது.
சமுதாயக் குழுக்களின் பொறுப்புகள்
எல்லோருக்கும் இருக்க இடம், உடுத்தத்துணி, சாப்பிட உணவு இருக்கும்படி பார்த்துக் கொள்வது இந்தக் குழுக்களின் முக்கியப் பொறுப்பு.
சமுதாயக் குழுக்களின் அங்கீகாரத்தோடு வார்டு குழுக்கள் தங்கள் வேலைகளை செய்யும்.
சேரிப்பகுதி அல்லது ஆதரவற்றவர்கள் கூட்டமாக வசிக்கும் பகுதிகளிலிருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இந்த சமூகக் குழுக்கள் அல்லது வார்டு குழுக்கள் அனுமதிக்காது.
அரசாங்கத்தின் மறுவாழ்வுத் திட்டங்கள் மூலம் அவர்களுக்குப் போதிய, திருப்திகரமான வசிப்பிடங்கள் தரப்பட்டுவிட்டன என்று உறுதிப்படுத்தினால் மட்டுமே அந்த இடங்கள் காலி செய்து தரப்படும்.
முக்கிய நகரங்களைச் சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு அவர்களது நிலங்கள் மீது முழுக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் வசிப்பவர்களின் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் ஒப்புதலுடன் ஒரு பிரச்னையை முன் வைத்தால் நகராட்சி அல்லது மாநகராட்சி அதைக் கவனித்து திருப்திகரமாக தீர்த்து வைக்க வேண்டும்.

மக்களின் பொறுப்பு:
தன்னாட்சி என்பது மக்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்று பார்த்தோம். ‘மக்களுக்கு அதிகாரம் வழங்குவதால் ஒரு பயனும் இல்லை. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை; சாதி, மத, இன அடிப்படையில் சண்டை தான் போட்டுக் கொள்ளுவார்கள். ஒற்றுமை இல்லாதவர்களிடம் எப்படி அதிகாரத்தைக் கொடுப்பது?’ என்று அரசாங்கம் கேட்கும். ஆங்கிலேயர்களும் நம்மைப் இப்படிச் சொல்லிச்சொல்லியே பிரித்து ஆண்டு வந்தார்கள். எந்த அரசு வந்தாலும் சமூகப் பிரிவினைகளை ஊதி விட்டு அதில் குளிர் காயவே விரும்புகிறது.
இங்கு மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம் தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார்:
‘எங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை நாங்கள் களைந்து கொள்ளுகிறோம். எங்கள் கையில் அதிகாரத்தைக் கொடுங்கள். 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி எங்களை ஆளுங்கள் என்று நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தை நீங்கள் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதை முதலில் எங்களுக்குத் திருப்பித் தாருங்கள்’ என்று கூறவேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமானால் நமக்குள் ஒற்றுமை வேண்டும். கிராம சபை, நகர சபைகள் கூடும்போது ஒருவர் மற்றவரின் நலம் விசாரிப்பதுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் இருப்பவர்கள் ஒரு குடும்பம் போல வாழவேண்டும். ஒரு வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் மற்றவர்கள் ஓடிப்போய் உதவவேண்டும். வீட்டுக் கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு மக்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்பட வேண்டும். கிராம சபையில் பிறகு கிராம விஷயங்களும், நாட்டு விஷயங்களும் விவாதிக்கப்பட வேண்டும். மனம் விட்டுப் பிரச்னைகளை விவாதிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்வது எல்லா மக்களையும் இணைக்கும். சொந்தப் பிரச்னைகளிலிருந்து நாட்டுப் பிரச்னைகளை வரை பேசும்போது ஒருவருக்கொருவர் நெருக்கம் ஏற்படும்.

சொந்த விஷயங்கள் பேசப்படும் போதே பேச்சு தானாகவே கிராம விஷயங்கள், நாட்டு விஷயங்கள் என்று மாறும். நாடு வேறு நாம் வேறு அல்ல என்ற மனநிலையை இது உண்டாக்கும். கிராமசபை கூடும்போது தவறாமல் கலந்து கொள்ளுங்கள். முதலில் வருபவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பிரச்னைகள் தீர்கின்றன என்ற செய்தி பரவப் பரவ நிறையபேர்கள் வர ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து இக்கூட்டங்கள் நடைபெறுவது மக்களுக்கு ஊக்கமளிக்கும்.

உங்கள் பகுதியில் மட்டுமின்றி, மற்ற பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள். இதன் மூலம் நீங்கள் நிறைய கற்கலாம். தன்னாட்சி என்பது இப்போதைய நிலையில் நமக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டிலேயே பல இடங்களில் தன்னாட்சி நடந்து வருகிறது. போகப்போக இதுவே நம் நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும் பரவி நாடு முழுவதும் இதனால் பயன்பெறப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
எத்தனை நாட்கள் நம் நாட்டில் இது சரியில்லை; அது சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்போம்? வாருங்கள் எல்லோரும் இணைந்து செயல் படுவோம். தன்னாட்சி மூலம் தன்னிறைவு பெறுவோம்.

இந்தக் கட்டுரைகளை எழுத பயன்படுத்தப்பட்ட புத்தகம்: திரு அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய ‘ஸ்வராஜ்’. தமிழாக்கம் திரு. கே. ஜி. ஜவர்லால்.