0 தன்னாட்சி - (5) நமது குடியரசு ஆட்சியில் என்ன தவறு?


தன்னாட்சி 5

நமது குடியரசு ஆட்சியில் என்ன தவறு?
மக்களின் ஆலோசனையை செயல்படுத்துவது அரசனின் கடமை – அர்விந்த் கெஜ்ரிவால்


இந்தியா ஜனநாயகத்தை எங்கே கற்றது? இந்தக் கேள்விக்கு தமது ‘தன்னாட்சி – வளமான இந்தியாவை உருவாக்க’ என்ற புத்தகத்தில் பதிலளிக்கிறார்  திரு அர்விந்த் கெஜ்ரிவால். நாம் நினைப்பது போல எங்கிருந்தோ குடியரசு முறையைக் கற்றுக் கொள்ளவில்லை இந்தியா. நம் நாட்டிலேயே குடியரசு இருந்திருக்கிறது புத்தர் காலத்தில். இன்னும் சொல்லப்போனால் இப்போது இருப்பதை விட வலிமை வாய்ந்ததாக, அழுத்தமாக இருந்திருக்கிறது. வியப்பாக இருக்கிறது, அல்லவா? பிகார் மாநிலத்தில் இருக்கும் பழமையான நகரமான வைஷாலிதான் உலகின் முதல் குடியரசு. சிலர் சொல்வது போல நாம் அமெரிக்காவிடமிருந்தோ, வேறு சிலர் நினைப்பது போல பிரிட்டனிடமிருந்தோ ஜனநாயகத்தைக் கற்றுக் கொள்ளவில்லை.

அரசாட்சி அல்லது முடியாட்சி காலத்தில் இப்போது இருப்பது போல தேர்தல் கிடையாது. மன்னனின் மகன் அடுத்த மன்னன் என்ற வாரிசு அரசியல் தான் இருந்தது. ஆனால் அவனுக்கு அதிகாரங்கள் கிடையாது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை இயங்கி வந்தது. முக்கியமான விஷயங்களில் முடிவுகளை கிராமங்களில் இருக்கும் கிராமசபை எடுக்கும். கிராம சபைகள் மக்களைக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும். அந்த மாதிரி மக்களால் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசன் செயல்படுத்த வேண்டும். என்ன ஒரு அருமையான அமைப்பு, பாருங்கள்.

இப்போதும் நம் நாட்டில் ஒரு அரசனை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாமெல்லாம் வாக்களித்துத் தேர்ந்தேடுக்கிறோம். அவர் நம் பேச்சைக் கேட்கிறாரா? அந்தக் காலத்தில் அரசனை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் அரசன் மக்களின் பேச்சைக் கேட்டு நடந்தார். இந்தக் காலத்தில் நாம் தெரிந்தெடுக்கிறோம் ஆனால் அவர் நம் பேச்சைக் கேட்பதில்லை! என்ன ஜனநாயகம் இது?
இந்தக் காரணத்திற்காகவே நம் தலைவர் ஏ. கெ. சொல்லுகிறார்: ‘இந்தியாவில் இருக்கும் ஜனநாயகம் மாற வேண்டும்’ என்று. ஐந்தாண்டுகளுக்கு ஆளும் அரசு நம் வாக்குரிமையினால் பதவிக்கு வருகிறது. அதன் பிறகு அரசாங்கம் நம் விருப்பத்தைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். மக்களின் கருத்துக்களை அவர்களிடம் கேட்டு அதன்படி அரசாங்கம் தனது தீர்மானங்களை எடுக்க வேண்டும். சட்டங்கள் இயற்றுவதில் யாருக்கு முன்னுரிமை கிடைக்கவேண்டும்? வாக்குகளை அளித்த மக்களுக்கு அல்லவா? ஆனால் இங்கு நடப்பது என்ன தெரியுமா? அரசியல்வாதியின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டங்கள் இயற்றப்படுகின்றன.  சட்டங்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கவேண்டும், இல்லையா?

ஜனநாயகத்தில் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்? மக்களின் குரல் வெளியே தெரியாமல் செய்துவிடுகிறார்கள்! தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களிடம் வந்து வாக்குக் கேட்கும் இந்தத் தலைவர்கள், வெற்றி பெற்றவுடன் வாக்களித்து தங்களை வெற்றிபெற வைத்த மக்களையே மறந்துவிடுகிறார்கள்!

இந்த அரசியல்வாதிகளிடம் பல கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார் நம் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்
  • ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகமா?
  • மக்களின் உரிமைகள் வாக்களிப்பதுடன் முடிந்து விடுகிறதா?
  • தாங்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்த தலைவர்களிடமே மக்கள் தங்கள் உரிமைக்காக ஏன் போராடவேண்டும்?
  • நமது தலைவர்கள் போராடி சுதந்திரம் பெற்றது ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக மட்டுமல்ல; தன்னாட்சிக்காகவும் தான். நமது சுதந்திர இந்தியத் திருநாட்டில் மக்கள்தான் ஆட்சியாளர்கள்; மக்கள்தான் நிர்வாகிகள் என்கிற நிலை என்று வரும்?
  • மக்கள் அமைதியுடனும், சந்தோஷத்துடனும் நிலை நிறுத்தப்பட்ட நீதியுடனும் வாழும் நாள் என்று வரும்?
  • நம்நாட்டில் நேர்மையான ஜனநாயக அமைப்பு இருக்கிறதா?
  • மக்களின் பங்களிப்பு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் இருக்கிறதா?
  • நம்நாட்டில் அரசியல் இத்தனை சீர் கேட்டிருக்க என்ன காரணம்? யார் காரணம்?


ஒரு கட்சியின் ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி வருவதால் மட்டும் எந்தப் பலனும் இல்லை. மக்களின் மனதில் மாற்றங்கள் வரவேண்டும். தன்னாட்சி என்றால் என்ன என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறியவேண்டும்.

காந்திஜி சொன்னது போல ஆங்கிலேயர்கள் நம்நாட்டை விட்டு வெளியேறி நாமே நம்மை ஆள ஆரம்பித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற சொல்வது தவறு என்று இப்போது புரிகிறது. ஆங்கிலேயர்கள் இருந்தபோது அவர்களால் கஷ்டப்பட்டோம். இப்போது நம் நாட்டவர்களாலேயே கஷ்டப்படுகிறோம்.  நமக்கென ஒரு அமைப்பு உருவாகவில்லை. ஆங்கிலேயர்களின் அமைப்பே தொடர்ந்தது. அதனால் வந்த கஷ்டங்கள் சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகியும் குறையவில்லை. நம்மை ஆள்பவர்கள் தலைநகரில் உட்கார்ந்து  கொண்டு திட்டம் தீட்டுகிறார்கள். நமக்கு என்ன வேண்டும் என்று நம்மைக் கேட்டு அல்லவா செய்யவேண்டும்? இன்னொன்று, இவர்கள் தீட்டும் திட்டங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. அந்தப் பணம் உண்மையில் யாருக்குப் போய்ச்சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய் சேருவதில்லை. மாறாக ஊழல்வாதிகளிடம் போய்ச் சேருகிறது.

நாட்டின் முன்னேற்றம் அரசியல்வாதிகளின் குறிக்கோள் அல்ல; எப்படிப் பணம் பண்ணுவது என்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இந்த நிலை மாற தன்னாட்சி வேண்டும் என்கிறது ஆம்ஆத்மி கட்சி. நாம் வாழும் சமுதாயம் குறித்து, நம்முடைய ஊர் குறித்து, நம்முடைய கிராமம் பற்றி நாம் தீர்மானிப்பது தான் தன்னாட்சி.
நிஜமான ஜனநாயகத்தில் மக்களின் நேரடிப் பங்களிப்பு அவசியம். அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மக்களின் அங்கீகாரம் வேண்டும்.

அரசின் திட்டங்களில் மக்கள் எப்படித் தீவிரப் பங்கேற்க முடியும்?

அடுத்த பகுதியில் பார்ப்போம்.