0 தன்னாட்சி - (8) நம் நாட்டு மக்கள் ஏழைகளாக இருக்கவே விரும்புகிறார்கள்!

அரசு முன்வைக்கும் திட்டங்கள் எல்லாம் மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிடுகின்றன. - அர்விந்த் கெஜ்ரிவால்


1Arvind-Kejriwal.jpg (650×727)

அரசு ஊழியர்கள், அரசு திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதி ஆகியவை மக்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்று சென்ற பதிவில் பார்த்தோம், இல்லையா? இது பற்றி மேலும் சொல்லுகிறார் திரு.அரவிந்த் கெஜ்ரிவால்

தில்லியிலிருந்த அதிகாரி ஒருவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன் பெயர் ‘நம் கிராமம் - நம் நீர்’ என்பது. ஒவ்வொரு கிராமமும் மழைக்காலத்தில் நீரை சேகரித்து வைத்துக் கொள்ள வழிவகை செய்தால் தண்ணீர்ப் பஞ்சமே இருக்காது என்று அவருடைய அபார மூளையில் ஒரு அபூர்வமான யோசனை பிறந்தது. மழைநீரை சேமிக்க முன் வரும் கிராமங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்து, மிகுந்து ஆர்வத்துடன் இந்த திட்டத்தை நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ஆணை பிறப்பித்தார்.  மாவட்ட ஆட்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் இந்த திட்டத்தைப் பற்றிச் சொல்லி உடனே செயல்படுத்துமாறு சொன்னார்கள்.

ஒரு கிராமத்தில் ஒரு கிராமத் தலைவர் தன் மக்களையெல்லாம் அழைத்து இந்தத் திட்டத்தைப் பற்றிக் கூறினார். உடனே அங்கு கூடியிருந்த மக்கள் எல்லோரும் பலமாகச் சிரித்தனர். அந்தக் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் என்பதே கிடையாது. வறட்சி என்றே பேச்சே இல்லை. மாறாக மழை பெய்யும்போதெல்லாம் வெள்ள அபாயம் தான். இந்த கிராமத்திற்கு வேண்டிய திட்டம் என்ன? உபரி நீரை எப்படி வெளியேற்றுவது என்ற திட்டம். வறட்சியால் தவிக்கும் கிராமங்களுக்குத் தானே மழைநீரை சேமிக்கச் சொல்லித் தர வேண்டும்?

ஒரு கிராமத்திற்குக் கூட சென்று பார்க்காமல், தில்லியில் உட்கார்ந்து கொண்டு திட்டம் போடுவதன் பலன் இப்போது புரிகிறதா? அருகருகே இருக்கும் கிராமங்களாக இருந்தாலும் கூட தேவைகள் என்னவோ வேறு வேறு தான். எல்லாப் பிரச்னைகளையும் திட்டம் போட்டுத் தீர்க்க முடியாது. சம்மந்தப்பட்ட கிராம மக்களிடம் அவர்களின் தேவை குறித்துப் பேசவேண்டும். விவாதிக்க வேண்டும். பிறகு திட்டம் போடவேண்டும். இப்படிப்போடப்படாத திட்டங்கள் எல்லாம் மக்களை பிச்சைக்காரர்களாக்கி விடுகின்றன என்கிறார் திரு ஏ.கெ. அதை விளக்க திரு ஏ.கெ. தன் தன்னாட்சி புத்தகத்தில் இன்னொரு வகையான அரசியலைத் தோலுரித்துக் காட்டுகிறார்: அதுதான் வறுமைக்கோட்டு அரசியல்.


வறுமைக்கோட்டு அரசியல் என்றால் என்ன?

திரு அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லுகிறார்: அரசு முன்வைக்கும் திட்டங்கள் எல்லாம் மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிடுகின்றன. எப்படி என்கிறீர்களா? பெருவாரியான திட்டங்கள் ஏழை மக்களையும் அவர்களின் ஏழ்மையை வைத்து வறுமைக் கோட்டுத் திட்டங்களாக மாறுகின்றன. இங்கு நாம் வறுமைக்கோட்டு அரசியல் என்றால் என்ன என்ற முதலில் தெரிந்துகொள்வோம். ஆட்சி வருபவர்கள் எல்லோருமே தங்களை ஏழைப்பங்காளன் என்று சொல்லிக் கொள்வார்கள். ஏழைகளின் அரசு எங்களுடையது என்பார்கள். அரசு போடும் திட்டங்கள் எல்லாமே ஏழைகளின் நல்வாழ்விற்காக என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் போடப்படும் திட்டங்களுக்கு ஏற்ப நிதியும் ஒத்துக்குவார்கள்.
ஆனால் அந்த நிதி ஏழை மக்களைச் சென்று அடையாது. திட்டம் போடும் அதிகாரிக்கும் இது நன்றாகத் தெரியும். ஒருமுறை திரு ஏ.கெ. நாட்டின் மூத்த அரசியல்வாதி ஒருவரைச் சந்தித்தாராம். அவரிடம் நம் தலைவர் சொன்னாராம்: ‘தில்லியில் உட்கார்ந்து கொண்டு நாட்டின் கடைக்கோடியிலிருக்கும் கிராமத்திற்கு என்ன வேண்டும் என்று திட்டம் போடாதீர்கள். அவர்களுக்கு என்ன தேவை என்று அவர்களிடம் கேளுங்கள். அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை அவர்களிடமே கொடுங்கள். அதை எப்படி செலவழிப்பது என்று அவர்களே தீர்மானிக்கட்டும்’, என்று. அப்போது அந்த அரசியல்வாதி சொன்னாராம்: ஒவ்வொரு திட்டத்திற்கும் பின்னால் எத்தனை பணமுதலைகள் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தத் திட்டங்கள் நிறுத்தப்பட்டால் எல்லாக்கட்சிகளும் இதுவரை அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கிவிடும். அரசு கவிழ்ந்துவிடும்.

அரசிற்கு ஆதரவு கொடுக்கும் கூட்டணிக் கட்சிகளை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ள அரசு திட்டங்களைத் தீட்டுகிறது – கிராம மக்களுக்காக அல்ல! ஆக, எந்தத் திட்டமும் மக்களைச் சென்று அடைவதில்லை. என்றைக்குமே அடையப்போவதும் இல்லை. இதெல்லாம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிந்தே இருக்கிறது. பின் ஏன் தொடர்ந்து இதுபோலத் திட்டங்களைப் போடுகிறார்கள்? பதில் ரொம்ப எளிது: தங்களை ஏழைகளின் நண்பன் என்று காட்டிக் கொள்ள! இப்படிச் செய்வதால் தங்கள் வாக்கு வங்கிகள் பத்திரமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்! இதுதான் வறுமைக் கோட்டு அரசியல்.

இந்த திட்டங்களுக்கு மக்களின் ஆதரவும் இருப்பதில்லை; அவர்களது அதிருப்திக்கும் ஆளாகின்றன என்பது இன்னொரு நிஜம். அரசு அதிகாரிகள் எந்த கிராமத்திற்குப் போனாலும் அந்த கிராமத்து மக்கள் வந்து அவர்களிடம் ‘ ‘ஏன் என் பெயர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் இல்லை?’ என்று கேட்பார்களாம். வறுமைக் கோட்டிற்குக் கீழ் என்றால் ஆதரவற்ற, பணமில்லாத, இயலாமை நிறைந்த சமூகத்தில் மற்றவர்களின் உதவியுடன் வாழும் ஒரு குடிமகனைக் குறிக்கும். எல்லோரும் பிச்சைக்காரர்கள் ஆவதற்கு விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கே எல்லா சலுகைகளும் கிடைக்கின்றன. மனிதர்களின் மனப்பாங்கு எப்படி மாறிவிட்டது பாருங்கள்!
ஏதாவது ஒரு கிராமத்திற்குப் போய் யாராவது ஒருவரிடம் கேளுங்கள்: ‘ சென்ற முறை நாங்கள் வந்தபோது நீங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் பட்டியலில் இருந்தீர்கள். இப்போது உங்களுக்காக அரசு பல திட்டங்களை உருவாக்கி இருக்கிறதே, அவற்றின் மூலம் நீங்கள் சுயச்சார்போடு வாழ்கிறீர்களா?’ என்று. யாரும் சுயச்சார்போடு வாழ்வதாகச் சொல்ல விரும்புவதே இல்லை. இலவசங்கள் கிடைக்காதே!


அடுத்த பகுதியில் நிலச் சுரண்டல் பற்றிப் பார்ப்போம்.