0 தன்னாட்சி - (7) அரசாங்கத்தின் பணம் வீணாகிறது!அவசியமான விஷயங்களுக்கு செலவிடாமல் தேவையற்ற விதங்களின் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. -  அர்விந்த் கெஜ்ரிவால்பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் ஒரு உரையாடலைக் கேளுங்கள்:

பொதுமக்கள்: எங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. ‘வீதிக்கு ஒரு கைப்பம்பு கேட்கவில்லை. எங்கள் கிராமத்தில் பொதுக் கிணறு ஒன்று வெட்டிக் கொள்ளுகிறோம். இப்போது வெகு தூரத்திற்கு நடந்து போய் நீர் கொண்டு வர வேண்டியிருக்கிறது. கிணறு வெட்ட நிதி கொடுங்கள்!

அரசு: அரசாங்கத்திடம் நிதி இல்லை...!

பொதுமக்கள்: தினந்தோறும் வெகு தொலைவு நடந்து போய் குடிநீர் கொண்டு வருகிறோம். பரவாயில்லை. எங்களுக்கு நடப்பது கடினமில்லை. நல்ல ரோடுகள் இருந்தால் அந்தக் கஷ்டம் எங்களுக்குத் தெரியாது. சாலை போட்டுக் கொடுங்கள்!
அரசு: அரசாங்கத்திடம் நிதி இல்லை...!

பொதுமக்கள்: எங்கள் குழந்தைகள் படிக்க ஆரம்பப் பாடசாலை இல்லை. சின்னக் குழந்தைகளை படிப்பிற்காக அடுத்த கிராமத்திற்கோ, அல்லது பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கோ அனுப்ப கஷ்டமாக இருக்கிறது. எங்கள் கிராமத்திற்கென்று ஒரு ஆரம்பப் பள்ளி வேண்டும்!

அரசு: அரசாங்கத்திடம் நிதி இல்லை...!

எதற்குமே இந்த ஒரே பதிலைச் சொன்னால் நாம் கட்டும் வரி என்னவாகிறது? கிராமத்தில் இது போன்று பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக ஒதுக்கப்படும் நிதி அவர்களைப் போய்ச் சேருகிறதா? யாருக்குத் தெரியும்? அரசாங்கத்தின் பணம் எங்கு போகிறது? தெரியாது. நாம் ஏதாவது பிரச்னையுடன் அரசாங்கத்தை அணுகும்போது ‘நிதி இல்லை’ என்றால் நாம் வேறு எங்கு போவது?

இங்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறார் திரு ஏ.கெ. தன் ‘தன்னாட்சி’ புத்தகத்தில்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தில்லியில் நடந்தது. செலவு என்ன தெரியுமா? 70,000 கோடி ரூபாய்! நன்றாக இருந்த சாலைகள் உடைக்கப்பட்டு மறுபடியும் போடப்பட்டன. நடைபாதைகளும் உடைக்கப்பட்டு 400 கோடி ரூபாய் செலவில் திரும்பப் போடப்பட்டன. இதற்கெல்லாம் செலவு செய்யும் அரசு ஏழைத் தொழிலாளர்கள் வயிற்றில் அடித்ததுதான் உச்சம். தில்லி கார்ப்பரேஷனில் வேலை செய்த துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் கொடுக்கப்படவில்லை. ஒப்பந்தக்காரர்களுக்கு ஐந்து ஆண்டுகளாகப் பணம் தரப்படவில்லை. ஆனால், கார்ப்பரேஷன் கட்டிடத்தின் மீது அரசியல்வாதிகள் வந்திறங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

இது போன்ற முறைகேடான செலவுகளுக்கு இன்னொரு உதாரணம்:
தில்லியில் சுந்தர் நகரி என்று ஒரு சேரிப்பகுதி. அங்கு வாழும் மக்களுக்கு குடிநீர் இல்லை. கழிவு நீர் வெளியேற வசதியில்லை. குழந்தைகள் படிக்க உயர்நிலைப் பள்ளி இல்லை. அரசாங்கத்திடம் போனால் பழைய பல்லவி ‘நிதி இல்லை!’ என்று பாடுகிறார்கள். ஆனால் ஒரு வேடிக்கை பாருங்கள். அந்தப் பகுதியில் அறுபது லட்ச ரூபாய் செலவில் நீரூற்று அமைத்திருக்கிறது அரசாங்கம்! என்ன அராஜகம் இது? குடிநீருக்காக மக்கள் அவதியுற்றுக் கொண்டிருக்கும்போது நீரூற்று அமைப்பது எங்காவது நடக்குமா? எவ்வளவு பெரிய அவலம் இது? மக்களின் வரிப்பணம் எப்படி வீணாகிறது, பாருங்கள். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத அரசாங்கத்தை என்ன சொல்வது? இதில் இன்னொரு வயிற்றெரிச்சல் என்னவென்றால் அந்த நீரூற்று ஒருநாள் கூட வேலை செய்யவில்லை என்பதுதான்! மக்களின் வரிப்பணத்தை இப்படியா வீணடிப்பது? இந்த உதாரணங்களிலிருந்து என்ன தெரிய வருகிறது? அரசாங்கத்திடம் நிதி இருக்கிறது. அவசியமான விஷயங்களுக்கு செலவிடாமல் தேவையற்ற விதங்களின் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதைத்தான் ஆம்ஆத்மி கட்சி தட்டிக் கேட்க விரும்புகிறது.

கிராமங்களில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்க, அவற்றிற்கு நிதி ஒதுக்க அவற்றை வேண்டியவர்களுக்கு எப்படி விநியோகிப்பது போன்றவற்றை தீர்மானிப்பது தில்லியில் உட்கார்ந்திருக்கும் சிலர். பொதுமக்களை வாட்டும் பிரச்னை என்ன, அவர்களின் தேவைகள் என்ன? பிரச்னைகளைப் போக்க, தேவைகளைப் பூர்த்தி செய்ய எப்படி பணத்தை செலவு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் எப்படி தீர்மானிக்க முடியம்? முதியோர் உதவி நலத்திட்டம், விதவைகள் நலத்திட்டம், தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (NREGS) நுகர்பொருள் பங்கீடு முதலிய திட்டங்களை தலைநகர் தில்லியிலும், மற்ற பெரிய நகரங்களிலும் உட்கார்ந்து கொண்டே தீட்டுகிறார்கள்.  அவர்களுக்கு கிராம மக்களின் தேவைகள் பற்றி தெரியுமா?

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். கிராம மக்களுக்குத் தானே அவர்கள் தேவை தெரியும்? நிலங்களின் பாசனத்திற்கு பணம் வேண்டியிருக்கும். அடிப்படை சுகாதார வசதிகள் வேண்டியிருக்கும். ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதார மையம் போன்ற வசதிகள் தேவைப்படும். ஒவ்வொரு கிராமத்திற்கும் இத்தனை என்று நிதி ஒதுக்கியிருப்பார்கள். இந்த நிதியில் கொஞ்சம் முதியோருக்கும், கொஞ்சம் விதவைகளுக்கு, கொஞ்சம் வீட்டு வசதி என்று ஒதுக்கியிருப்பார்கள். இந்த நிதிகள் எல்லாமே ஒரு பெரிய திட்டத்திற்கான நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். இவற்றைக் கட்டுண்ட நிதி என்பார்கள். முதியோருக்கு என்று ஒதுக்கியிருக்கும் நிதியில் பற்றாக்குறை வந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். மற்ற நிதி ஒதுக்கீட்டிலிருந்து எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரு உதாரணம் பாருங்கள்: ஒரிசாவில் ஒரு சிறிய கிராமம். அங்கு சரியான போக்குவரத்து வசதி எதுவுமில்லை. ஒருமுறை அறுபத்திமூன்று குடும்பங்கள் அங்கு காலராவில் பாதிக்கப்பட்டிருந்தன. 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைதான் இந்த கிராமத்திற்கு வெகு அருகில் இருக்கும் மருத்துவமனை.  பஞ்சாயத்திடம் நிதி இருந்திருக்கிறது. ஆனால் அது போக்குவரத்து வசதி செய்யப் பயன்படவில்லை. விளைவு? ஏழு பேர் மரணமடைந்தனர். நிதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை. மனித உயிர்களைக் காப்பாற்றமுடியாத பணம் இருந்து என்ன பயன்?

குடியரசு நாடாக இருந்தும் இந்தியாவில் பொதுமக்களின் தேவைகள் உணரப்படவில்லை; அவைகளைப் பூர்த்தி செய்ய எந்த ஒரு அரசியல்வாதியும் முன் வருவதில்லை. திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அவை நிறைவேறாமலேயே போகின்றன. திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி அனாவசிய செலவுகளுக்குப் பயன்படுகிறது. இந்த நிலை மாறுவதற்காகவே தன்னாட்சி வேண்டும் என்கிறார் நம் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்


இந்த அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களை மேலும் பார்ப்போம்.