0 தன்னாட்சி - (6) நமக்கு அதிகாரம் இருக்கிறதா?

ஒரு கிராமத்தில் இருக்கும் 1000 குடும்பங்கள் பத்து ஆண்டுகளில் செலுத்தும் வரி 3.6 கோடி ரூபாய்! நினைவிருக்கட்டும் இது மொத்தமும் நம் பணம். - அர்விந்த் கெஜ்ரிவால்

Anna_Hazare.jpg (400×300)

இப்போதிருக்கும் நமது ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை என்கிறார் திரு அர்விந்த் கெஜ்ரிவால். ஏனெனில் அரசு ஊழியர் நம் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் ஏன் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்? விடை ரொம்பவும் சுலபமானது: நாம் கட்டும் வரியிலிருந்துதான் அவர்களின் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நம்மில் சிலருக்கு இந்த செய்தி வியப்பானதாக இருக்கும்.


சில உதாரணங்கள் சொன்னால் தெளிவாகப் புரியும்.
நீங்கள் ஒரு அரசு பொதுமருத்துவமனைக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வெகு நேரம் காத்திருந்தும் மருத்துவர் வரவில்லை. வந்தாலும் நோயாளிகளை சரியாகக் கவனிப்பது இல்லை. அதேபோல கிராமத்துப் பள்ளியில் ஆசிரியர் சரியான நேரத்துக்கு வரவில்லை; சரியாக பாடம் நடத்துவதில்லை; நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? புகார் செய்தால் இவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா? தெரியாது!


ரேஷன் கடைக்குப் போகிறீர்கள் – எப்போது போனாலும் பொருட்கள் கையிருப்பு இல்லை என்கிறார். அவர் அந்தப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்றுவிடுகிறார் என்று சிலநாட்களுக்குப் பின் உங்களுக்குத் தெரிய வருகிறது. என்ன செய்வீர்கள்? கோபத்துடன் காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுக்கிறீர்கள். அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? தெரியாது, தெரியாது, தெரியாது! ஏன்  இந்த சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றுமே செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பதில் மிகவும் எளிமையானது: அரசு ஊழியர்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை!


நாம் எல்லோருமே வரி கட்டுகிறோம். உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் இது. நான் அலுவலகம் செல்லுவதில்லை; அதனால் நான் வரிகட்டுவதில்லை என்று யாருமே சொல்ல முடியாது. கடைக்குச் சென்று ஒரு சிறிய பொருள் – சோப்பு அல்லது சீப்பு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அதன் விலையிலேயே நீங்கள் செலுத்த வேண்டிய வரி ஒளிந்திருக்கிறது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? விற்பனை வரி, சுங்க வரி என்று விதம்விதமான வரிகள். எல்லாவற்றையும் நம் தலையில் கட்டிவிடுகிறது அரசு. பாவம் மக்கள்! அரசின் வருமானமே நாம் செலுத்தும் வரிதானே!


இந்த இடத்தில் ஒரு சின்ன கணக்குப் போட்டுக் காண்பிக்கிறார்  திரு  அரவிந்த் கெஜ்ரிவால்
நம் நாட்டில் 70% மக்கள் தினம் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழ்ந்து வருகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. இதன்படி, ஒரு ஐந்து பேர்கள் கொண்ட குடும்பத்திற்கு மாத வருமானம் 3,000 ரூபாய். எல்லா வரிகளையும் சேர்த்து இவர்கள் செலுத்தும் வரி 10% என்று வைத்துக் கொள்வோம். பரம ஏழை கூட ஆண்டு ஒன்றுக்கு 3600 ரூபாய் வரியாக செலுத்துகிறார். ஒரு வருடத்திற்கு 36 லட்சம் ரூபாய் வரி. ஒரு கிராமத்தில் இருக்கும் 1000 குடும்பங்கள் பத்து ஆண்டுகளில் செலுத்தும் வரி 3.6 கோடி ரூபாய்! நினைவிருக்கட்டும் இது மொத்தமும் நம் பணம்.

அரசுக்கு வருமானம் இது போன்ற வரிகளிலிருந்து வருகிறது. மக்களின் நலவாழ்வுக்கு என்று மட்டும் அரசு நம் வரிப்பணத்தை செலவழிப்பது இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் நாம் செலுத்தும் பணம் தான் பயன்படுகிறது. எனவே நாம் கொடுக்கும் வரியிலிருந்து சம்பளம் பெறுபவர்கள் நம்மை மதிப்பது இல்லை. நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை. இவ்வளவு ஏன், நாம் அவர்கள் முன் வந்து நிற்பதைக் கூட கவனித்ததாகக் காண்பித்துக் கொள்ளமாட்டார்கள். என்னவோ அவர்கள் நம்மை ஆள்பவர்கள் என்றும் நாம் அவர்கள் அடிமை என்றும் நினைப்பு!


நம் வாக்குகளினால் பதவிக்கு வந்து நாம் செலுத்தும் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வாழும் இவர்கள் நம் சேவகர்கள். ஊதியம் மட்டுமில்லை இவர்கள் வீட்டில் இருக்கும் கார், ஏசி, குளிர்சாதனப் பெட்டி எல்லாமே நம் பணத்தில் கிடைக்கிறது இவர்களுக்கு. இவர்களின் பணியாட்களுக்கும் நாம் தான் ஊதியம் அளிக்கிறோம். இங்கு அரசு ஊழியர்கள் என்று நாம் சொல்வது மாவட்ட ஆட்சியாளர்களிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை. இவர்கள் எல்லோருக்குமே தாங்கள் அரசர்கள் என்றும் உண்மையான அதிகாரம் உள்ள பொதுமக்கள் இவர்களின் பணியாட்கள் என்றும் நினைப்பு. என்ன செய்வது?


இதற்குக் காரணம் என்ன? வெள்ளையர்கள் வெளியேறி விட்டாலும் அவர்கள் அமைத்துக் கொடுத்த அமைப்பு அப்படியே இருக்கிறது. நமது நாட்டில் எந்த மக்களுக்காக அரசு அமைப்பு உண்டாக்கப்பட்டதோ, அந்த மக்களை விட அரசு அமைப்பு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அந்த அமைப்பு மக்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறது. அந்த அளவிற்கு அமைப்பின் கை மேலோங்கி இருக்கிறது.


காந்திஜி அன்று சொன்னாரே ‘ஆட்சி நம் கைக்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு’ என்று அது இன்று நிஜமாகிவிட்டது. அன்றைய அரசியல் அமைப்பு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் நம் நாட்டை விட்டுப் போய்விட்டாலும் அவர்கள் உருவாக்கிய அமைப்பு போகவில்லை. விளைவு ஊழலும், அநீதியும் அதிகமாகிக் கொண்டே போகிறது.


நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் வேண்டும் என்றால் கிராமங்கள் முன்னேற வேண்டும். அவற்றின் பொருளாதாரம் முதலில் முன்னேற வேண்டும். நாட்டின் தலைநகரில் உட்கார்ந்து கொண்டு திட்டங்கள் போடுவதாலோ, அதற்காகப் பணத்தை (மக்களின் வரிப்பணம்!) வாரிக் கொட்டுவதாலோ பொருளாதாரம் முன்னேறாது. மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதால் மட்டுமே இது சாத்தியப்படும்.


வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், பணவீக்கம், வன்முறை, தீவிரவாதம், தீண்டாமை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் தன்னாட்சி என்கிறார் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் திரு  அரவிந்த் கெஜ்ரிவால், 


மேலும் பார்ப்போம்......