0 தன்னாட்சி - (2) வாக்குரிமையை பயன்படுத்துவோம்

‘நிஜமான குடிமக்களின் ஆட்சி வேண்டுமென்றால் ஆட்சியில் மக்களின் நேரடிப் பங்களிப்பு மிகவும் அவசியம்
-திரு.அரவிந்த் கெஜ்ரிவால்


‘உண்மையான ஜனநாயக அரசு என்பது தில்லியில் உட்கார்ந்திருக்கும் சிலரால் நடத்தப்படுவது இல்லை. அதிகாரம் என்பது ஒரு சில இடங்களிலோ, ஒரு சில நபர்களிடமோ இருக்கக் கூடாது. அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் அதிகார மையங்களை இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்’ என்றார் நம் தேசப்பிதா.

‘முதல் குடியரசு தினத்தன்றே இந்த வார்த்தைகளை நாம் மறந்துவிட்டோம்’ என்கிறார் திரு அண்ணா ஹசாரே. ஜனநாயகத்தில் மக்களின் கை மேலோங்கி இருக்க வேண்டும். நம் நாட்டில் எதிர்மாறாக இருக்கிறது. அதாவது அமைப்பு மக்களைவிட சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஜனநாயகம் யாருக்காக உருவாக்கப்பட்டதோ அவர்களை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவிற்கு அமைப்பு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

இதனால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அடித்தட்டு மக்களிடையே தினசரி வாழ்க்கை என்பதே ஒரு பெரிய யுத்தம். சராசரி இந்தியனின் வாழ்க்கை ஊழலாலும், விலைவாசி உயர்வாலும் தடுமாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் உண்மைப் பொருளை நாம் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல்களில் வாக்களிப்பதுடன் நம் கடமை முடிந்துவிடவில்லை என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும்.

இந்தக் கட்சி போய் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வருவதால் நாட்டில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பதை மக்கள் எல்லோரும் உணர வேண்டும். நம் இலக்கு நம் தலைவர் முன்வைக்கும் தன்னாட்சி என்பதை நாம் எல்லோரும் அறிய வேண்டும்.

இங்கு இன்னொரு வருத்தமான செய்தியையும் சொல்லி ஆகவேண்டும்: நம்மில் பலர் வாக்கு அளிப்பதே இல்லை. தேர்தலுக்காக அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் எல்லாவற்றிற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படியும் பலர் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு சோம்பல் பட்டுக் கொண்டு அந்த நாளை தொலைகாட்சி பார்த்துக் கொண்டும், வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டும் செலவு செய்கிறார்கள். நாட்டுப்பற்று இல்லாத இவர்கள் தங்களது கடமைகளை சரிவரச் செய்யாமல் நாட்டையும், தலைவர்களையும் குறைசொல்லிக் கொண்டிருகிறார்கள்.

வாக்குரிமை என்பது நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம். இதை நம்மில் பலர் உணர்வதே இல்லை. ஒரு குடியரசு நாட்டில் மக்களின் சக்தி எத்தகையது என்பது காட்ட வாக்குரிமை என்னும் ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது எதுவுமில்லை.

வாக்குரிமை என்பது என்ன? நாம் ஏன் வாக்களிக்க  வேண்டும்?

·         வாக்குரிமை என்பது நமது குரல். நாம் வாக்கு அளித்து வெற்றிபெறுபவர் நமது பிரதிநிதிகள். கல்வி, சமூகப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பல முக்கிய விஷயங்களில் நம் தேவை என்ன என்று நம் சார்பில் அவர்கள் சட்டசபையில் பேச நாம் அளிக்கும் உரிமை நமது வாக்கு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

·         என் ஒரு வாக்கு என்ன மாற்றங்களை கொண்டு வந்துவிடும்? இப்படி நினைப்பதே தவறு. ஒவ்வொரு வாக்கும் நம் உரிமைகளைப் பெற மிக மிக அவசியம். நம் வாக்குரிமையைப் பயன்படுத்துவதுடன், நம் குடும்பத்தவர்களையும் வாக்கு அளிக்க வைப்பதால் நிச்சயம் நம்மால் சமூகத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். நமது வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறி சமூகத்திற்குக் கேடு விளைவிப்பதைத் தடுக்க நிச்சயம் நாம் எல்லோரும் வாக்கு அளிக்க வேண்டும்.

·         நாம் வாக்கு அளிப்பது நமக்காக மட்டுமில்லை;  நம் குழந்தைகளுக்காகவும் கூட. அவர்களால் வாக்கு அளிக்க இயலாது என்பதுடன் அவர்களுக்கான பள்ளிக்கூடங்கள், அவர்களது பாதுகாப்பு, எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய எல்லா வசதிகளுக்காகவும் இன்று வாக்கு அளிக்கிறோம்.

·         நாம் அளிக்கும் வாக்கு நாம் வாழும் நம் தொகுதியை மாற்ற வல்லது. பக்கத்துத் தொகுதிக்கு எல்லா வசதிகளும் கிடைத்திருக்கிறது என்றால் அவர்கள் தங்கள் வாக்குரிமைகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள்?
·         மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு வாக்கு அளிப்பதன் மூலம் நாம் நம் வாழ்விலும், நமது ஊரிலும், நாட்டிலும் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.

·         எத்தனை பேர் சுதந்திரத்திற்காகப் போராடி இருக்கிறார்கள். நாம் அந்தக் காலத்தில் இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் இன்று அவர்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தாய்த்திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பாஎன்கிறார் மகாகவி பாரதியார். தாய்த்திருநாட்டையும், அதன் தியாகிகளையும் மதிப்பவர் என்றால் நிச்சயம் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்.


·         இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு. 


     ‘நாடு என்ன செய்தது நமக்கு
என்று கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு
என்று கேட்டால் நன்மை உனக்கு


வேறு எந்த நன்மையையும் செய்யாவிட்டாலும், வாக்கு அளித்து நம் உரிமையைக் காத்துக் கொள்வோம்.

·         நம் நாட்டின் சரித்திரம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. மிகப் பழைமையான, பெருமை மிக்க கலாச்சாரத்தைக் கொண்ட நாடு இது. அந்தக் கலாச்சாரத்தை மதிப்பவர் என்றால் வாக்கு அளியுங்கள்.
·         அதிகப்படியான வாக்குகள் பெறும் மக்கள் பிரதிநிதிக்கு அதிக பலம் கிடைக்கிறது. அதனால் அவரது குரலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. மக்களுக்காக அவர் மிகுந்த பலத்துடன் பேசமுடியும். போராட முடியும். நமது பிரதிநிதிகளின் கைகளை பலப்படுத்த நாம் ஒவ்வொருவரும் வாக்கு அளிப்பது மிக மிக அவசியம்.

வாக்களிப்பதன் மூலம் மட்டுமே நம்மால் ஆட்சியில் பங்கு கொள்ள முடியும் என்பதால் நாம் ஒவ்வொருவரும் நமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம். குடிமக்களின் ஆட்சி என்பதற்கு இது ஒரு அடையாளம் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும்.

தன்னாட்சிக்கு அடிப்படை நமக்குக் கிடைக்கும் இந்த வாக்குரிமை என்பதை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.


மேலும் பேசுவோம்......